ADDED : டிச 06, 2024 06:35 AM
பெங்களூரு: 'விவசாயி மரணத்திலும் அரசியல் செய்வது சரியல்ல' என, உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
ஹாவேரி ஹனகல்லை சேர்ந்தவர் சன்னப்பா, 24; விவசாயி. கடந்த 2022ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சன்னப்பா புகைப்படத்தை கடந்த மாதம் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்ட, பெங்களூரு தெற்கு பா.ஜ., -- எம். பி., தேஜஸ்வி சூர்யா, வக்பு வாரியம் நோட்டீஸ் கொடுத்ததால் சன்னப்பா தற்கொலை செய்து கொண்டதாக பதிவிட்டு இருந்தார்.
ஆனால், அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்தது. பொய் தகவல் பரப்பியதாக தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் தேஜஸ்வி சூர்யா மனு செய்தார். நீதிபதி நாகபிரசன்னா விசாரிக்கிறார்.
நேற்று நடந்த விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'விவசாயி தற்கொலை செய்துள்ளார். அவரது குடும்பத்தின் நிலைமை சோகமானது. ஒரு உயிர் போய்விட்டது. இதிலும் நீங்கள் அரசியல் செய்கிறீர்கள்' என்று தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும் மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.