காங்., ஆட்சியை கவிழ்க்க பா.ஜ., பேரம் பேசியது உண்மை தான்! சித்தராமையா குற்றச்சாட்டுக்கு 'ஒத்து ஊதும்' அமைச்சர்கள்
காங்., ஆட்சியை கவிழ்க்க பா.ஜ., பேரம் பேசியது உண்மை தான்! சித்தராமையா குற்றச்சாட்டுக்கு 'ஒத்து ஊதும்' அமைச்சர்கள்
ADDED : நவ 15, 2024 04:16 AM

பெங்களூரு: காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.,க்கள் 50 பேரிடம் தலா 50 கோடி ரூபாய், பா.ஜ., பேரம் பேசியதாக முதல்வர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். 'அது உண்மை தான்' என்று அமைச்சர்கள், 'ஒத்து' ஊதுகின்றனர். பேரம் பேசியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா சவால் விடுத்து உள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த அரசு வந்து, 17 மாதங்கள் ஆகின்றன. அரசை கவிழ்க்க, முன்னாள் முதல்வர் குமாரசாமி சிங்கப்பூரில் அமர்ந்து, திட்டம் தீட்டுவதாக கூறி, துணை முதல்வர் சிவகுமார் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தங்கள் கட்சிக்கு இழுக்க, பா.ஜ., சார்பில் சிலர் 5 கோடி ரூபாய் பேரம் பேசுவதாக, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கனிகாவும் கூறி இருந்தார்.
அம்பலம்
இந்நிலையில், மைசூரின் எச்.டி., கோட்டில் நேற்று முன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பேசுகையில், ''காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா.ஜ., முயற்சி செய்கிறது. எங்கள் கட்சியின் 50 எம்.எல்.ஏ.,க்களிடம் தலா 50 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசுகின்றனர். என் மீது கை வைத்தால், கர்நாடக மக்கள் சும்மா விட மாட்டார்கள்,'' என்று கூறி இருந்தார். இது, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
துணை முதல்வர் சிவகுமார் நேற்று கூறுகையில், ''எங்கள் எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, பா.ஜ., தலா 50 கோடி ரூபாய் பேரம் பேசியது உண்மை. எந்த எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசப்பட்டதோ, அவர்கள் எங்களிடம் வந்து சொல்லி விட்டனர். என்ன நடந்தது என்பதை விரைவில் அம்பலப்படுத்துகிறேன்,'' என்றார்.
100 சதவீதம்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், ''ஆப்பரேஷன் தாமரைக்கு பா.ஜ., முயற்சி செய்வது, 100க்கு 100 சதவீதம் உண்மை. இதுபற்றி என்னிடம் தகவல் உள்ளது. எனக்கு மேல் முதல்வரிடம் நிறைய தகவல் உள்ளது. தகவல் கூறுபவர்கள் யார் என்று சொல்ல முடியாது. பல மாதங்களாக அரசை கவிழ்க்கும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பது தான் பா.ஜ.,வின் நோக்கம்,'' என்றார்.
விவசாயத் துறை அமைச்சர் செலுவராயசாமி கூறுகையில், ''முதல்வர் சித்தராமையா சரியான தகவல் இல்லாமல், எதையும் கூறும் நபர் கிடையாது. ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பது உண்மை தான். எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 50 கோடி ரூபாய் கொடுக்க, பா.ஜ.,வுக்கு பணம் எங்கிருந்து வந்தது,'' என்றார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா கூறுகையில், ''ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.,க்களிடம், பா.ஜ.,வின் ஒரு டீம் தொடர்ந்து பேச்சு நடத்துகிறது. எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் ஒப்புக் கொள்ளாததால், முதல்வரை, 'முடா' மற்றும் வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்குகளில் சிக்க வைக்க பார்க்கின்றனர். ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் பார்த்து கொண்டு, அமைதியாக இருக்க மாட்டோம்,'' என்றார்.
இவர்களை தவிர மற்ற அமைச்சர்களும், சித்தராமையாவின் கருத்துக்கு, 'ஒத்து ஊதி' வருகின்றனர். ஆனால், முதல்வர் கூறிய குற்றச்சாட்டை பா.ஜ., திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
பாசாங்குதனம்
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவின், 'எக்ஸ்' வலைதள பதிவு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மீதான நம்பிக்கையை, சித்தராமையா இழந்து விட்டார். அதனால் தான் எம்.எல்.ஏ.,க்களை தலா 50 கோடி ரூபாய்க்கு வாங்க முயற்சிப்பதாக, எங்கள் கட்சி மீது கற்பனையான குற்றச்சாட்டை கூறுகிறார். இது ஜனநாயக அமைப்பையும், எம்.எல்.ஏ.,க்களையும் அவமதிக்கும் செயல்.
எம்.எல்.ஏ.,க்களை கட்டுக்குள் வைத்து இருக்கவும், ஊழல்களை மறைக்கவும் பின்னப்பட்ட பொய் என்பதை அரசியல் அறிவு உள்ளவர்கள் நன்கு புரிந்து கொள்வர். பொய், பாசாங்குதனமே உங்கள் கட்சியின் தாரக மந்திரம். முதல்வர் நடத்திய தொடர் ஊழல்களில் விசாரணை இறுகுவதால், அவர் மனம் நிம்மதியாக இல்லை. பொறுப்பான பதவியில் அமர்ந்து கொண்டு, அதன் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் செயல்படுகிறீர்கள்.
இப்போது உங்கள் அரசு தான் உள்ளது. எம்.எல்.ஏ.,க்களிடம் தலா 50 கோடி பேரம் பேசப்பட்டது உண்மை என்றால், விசாரணைக்கு உத்தரவிடுங்கள் பார்க்கலாம். எது உண்மை என்று மக்களுக்கு தெரியவைப்பது உங்களது தார்மீக பொறுப்பு.
ஒருபுறம் முதல்வரின் மகன் நீதித் துறையை அவமதிக்கும் வகையில் பேசுகிறார். இன்னொரு புறம் அதிகாரத்தை இழக்கும் பயத்தில் முதல்வர் உள்ளார். ஆட்சியில் இருந்து அகற்றினால் மக்கள் சும்மா விட மாட்டார்கள் என்று, எதிர்க்கட்சிகளை பயமுறுத்தும் வகையில் பேசுகிறீர்கள். ஊழல் செய்யும் முதல்வர் ஏன் இன்னும் பதவி விலகவில்லை என்று, சாலையில் நின்று மக்கள் பேசி கொள்கின்றனர். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.