எய்ட்ஸ் பரப்ப முயற்சித்தது உண்மை தான் முனிரத்னா மீதான குற்றப்பத்திரிகையில் 'பகீர்'
எய்ட்ஸ் பரப்ப முயற்சித்தது உண்மை தான் முனிரத்னா மீதான குற்றப்பத்திரிகையில் 'பகீர்'
ADDED : டிச 29, 2024 06:50 AM

பெங்களூரு: பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீதான பலாத்காரம், ஹனிடிராப், எய்ட்ஸ் பரப்ப முயன்ற வழக்குகளில், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் 2,481 பக்க குற்றப்பத்திரிகையை, சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்தது.
அரசியல் எதிரிகளுக்கு எய்ட்ஸ் பரப்ப, முனிரத்னா முயற்சித்தது உண்மை தான் என்று 'பகீர்' தகவல் கூறப்பட்டு உள்ளது.
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 60. இவர் மீது கடந்த செப்டம்பர் 18ம் தேதி, ககலிபுரா போலீஸ் நிலையத்தில் 40 வயது பெண் பலாத்கார புகார் செய்தார்.
அந்த புகாரில், அரசியல் எதிரிகளை மிரட்ட, என்னை வைத்து ஹனிடிராப் செய்ய முயன்றார் என்றும் கூறி இருந்தார்.
இதையடுத்து முனிரத்னாவை, ககலிபுரா போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் அய்யன்னா ரெட்டி என்பவரும் கைதானார். இவர்கள் உட்பட மேலும் 5 பேர் மீதும் வழக்கு பதிவானது.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண், இன்னொரு அதிர்ச்சி தகவலையும் கூறினார். அதாவது எய்ட்ஸ் பாதித்தவர்கள் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, அந்த ரத்தத்தை ஊசியில் ஏற்றி அரசியல் எதிரிகளுக்கு செலுத்த, முனிரத்னா முயற்சி செய்தார் என்று கூறி இருந்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக் மீது எய்ட்ஸ் ரத்த ஊசியை பாய்ச்ச முயன்றார் என்றும் முனிரத்னா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
85-0 சாட்சிகள்
இதையடுத்து பலாத்காரம், ஹனிடிராப், எய்ட்ஸ் பரப்ப முயன்றது குறித்து, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் முனிரத்னா, இன்ஸ்பெக்டர் அய்யன்னா ரெட்டி, முனிரத்னாவின் ஆதரவாளர்கள் சுதாகர், சீனிவாஸ் ஆகிய 4 பேர் மீது 2,481 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையில் 'முனிரத்னா மீதான பலாத்காரம், ஹனிடிராப், எய்ட்ஸ் பரப்ப முயற்சித்த குற்றச்சாட்டுகள் உண்மை தான்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
நெருக்கடி
குற்றப்பத்திரிகையில் 146 சாட்சிகள் வாக்குமூலம், நீதிபதி முன்பு 8 பேர் அளித்த வாக்குமூலம், தடய அறிவியல் அறிக்கை, குரல் அறிக்கை உட்பட 850 சாட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
இந்திய தண்டனை சட்டம் 354 ஏ (இயற்கைக்கு மாறான உடலுறவு), 354சி (பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுப்பது), 376 (2) என் (கற்பழிப்பு), 308 (கொலை முயற்சி), 120 பி (குற்றவியல் சதி) உட்பட 13 பிரிவுகள் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது முனிரத்னாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

