பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் நடப்பது துரதிர்ஷ்டம்! 'மாஜி' முதல்வர் பொம்மை புலம்பல்
பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் நடப்பது துரதிர்ஷ்டம்! 'மாஜி' முதல்வர் பொம்மை புலம்பல்
ADDED : பிப் 06, 2025 11:10 PM

கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை மாற்றக் கோரி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
'விஜயேந்திராவை பதவியில் இருந்து நீக்கும் வரை ஓயமாட்டோம்' என்று சபதம் எடுத்துள்ளனர். இதற்காக தினமும் அவருக்கு எதிராக ஊடகங்கள் முன் பேசி வருகின்றனர். தென் மாநிலங்களில் முதன் முறையாக ஆட்சியை பிடித்த கர்நாடகாவில், பா.ஜ.,வின் இமேஜ், தொடர்ந்து டேமேஜாகி வருகிறது.
இதை சரி செய்ய, 'மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கும்' என்று கட்சி மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான சிவராஜ்சிங் சவுகான் அறிவித்திருந்தார். அதேவேளையில், விஜயேந்திராவை தலைவர் பதவியில் நீடிக்க வைக்க, அதிருப்தியாளர்களை சமாதானம் செய்ய கட்சி தலைமை நினைத்தது.
இதையடுத்து, அதிருப்தி அணியினர், முன்னாள் எம்.எல்.ஏ., குமார் பங்காரப்பா தலைமையில், கட்சியின் தேசிய அமைப்பு செயலர் சந்தோஷை டில்லியில் சந்தித்து, விஜயேந்திராவால் கர்நாடக பா.ஜ.,வில் நடக்கும் குளறுபடிகள், தேர்தலில் காங்கிரசுடன் செய்து கொண்ட உள் ஒப்பந்தம் குறித்து குற்றஞ்சாட்டினர்.
இதேவேளையில், பெங்களூரில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர் அசோக், முன்னாள் முதல்வரும், ஹாவேரி பா.ஜ., - எம்.பி.,யுமான பசவராஜ் பொம்மை ஆகியோர் சந்தித்து, 'விஜயேந்திராவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என்று வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
'லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எடியூரப்பா, பதவி விலக நேரிட்டதால், தன் சமுதாயத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மையை முதல்வராக்கினார். ஆரம்பத்தில் அவர் பேச்சை கேட்டு நடந்த பசவராஜ் பொம்மை, பின் அவரின் பேச்சை கேட்பதை நிறுத்தி விட்டார். இதனால் கோபமடைந்த விஜயேந்திரா, சமீபத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் பசவராஜ் பொம்மை மகன் பரத்தை தோற்கடித்தார்' என, காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை மாற்றும் அணிக்கு பசவராஜ் பொம்மையை தலைமை வகிக்க, எம்.எல்.ஏ., எத்னால் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு பசவராஜ் பொம்மை மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரில் நேற்று பசவராஜ் பொம்மை அளித்த பேட்டி:
காங்கிரசின் மோசமான ஆட்சியால், மாநிலத்தில் விவசாயிகள், பொது மக்கள், பெண்கள் துயரத்தில் இருக்கும் போது, பா.ஜ.,வில் உட்கட்சி பூசலால் வார்த்தை போர் நடத்துவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுதும் சிறந்த நிர்வாகத்தை அளித்து வருகிறார். அவர் தலைமையிலான கட்சி தலைமையின் முடிவே இறுதியானது.
நான் எந்த கோஷ்டிக்கும் தலைமை இல்லை. அனைவரையும் ஒன்றிணைக்க நேர்மையான வகையில் முயற்சி மேற்கொள்ளும் பல தலைவர்களில் நானும் ஒருவன். இரு தரப்பிலும் பொறுமை இழக்காமல், மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மற்றும் பிற மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஒன்றாக அமர்ந்து பேசினால், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இல்லையெனில், கட்சி மேலிட தலைவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட வேண்டும். மாநிலத்தில் கட்சி வளர்ச்சியில் தலைவர்கள் கவனம் செலுத்தி, உரிய முடிவெடுப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லியில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில், வரும் 10ம் தேதி கிரஹபிரவேசம் நடக்கிறது. இதில், அதிருப்தி அணியினர் பங்கேற்று ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதை மறுத்த சோமண்ணா, ''10ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 19 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இதில் எந்த உள் அர்த்தமும் இல்லை. நான் எந்த அணிக்கும் ஆதரவாக செயல்படவில்லை,'' என்றார்.