பட்டுவாடா செய்ய பதுக்கப்படும் பணம் பட்டியல் தயாரிக்கும் ஐ.டி., அதிகாரிகள்
பட்டுவாடா செய்ய பதுக்கப்படும் பணம் பட்டியல் தயாரிக்கும் ஐ.டி., அதிகாரிகள்
ADDED : பிப் 20, 2024 06:58 AM
பெங்களூரு: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய, பதுக்கி வைத்திருப்போரை நோட்டமிட்டு, சோதனை நடத்த, வருமான வரித்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
ஒரு காலத்தில் தேர்தல் மிகவும் நேர்மையாக நடந்தது என்று நம் பெற்றோர், மூத்தோர் சொல்வதை கேட்டிருப்போம். டிபாசிட் தொகை கூட, வாக்காளர்களே செலுத்தியதை அறிவோம்.
ஆனால், சில ஆண்டுகளாக தேர்தல் என்றாலே, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் வெவ்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டி போடுகின்றனர். பரிசுகள் வழங்கியும் வாக்காளர்களை ஈர்க்கின்றனர்.
இதற்காக, சில மாதங்களாகவே அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் வீடுகளிலும், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வீடுகளிலும் பணம் பதுக்கியதையும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து, பறிமுதல் செய்ததையும் பார்த்துள்ளோம்.
இந்த வகையில், தேர்தலுக்காக முறைகேடாக பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் யார் யார் என்பதை, வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டமிட்டு, விசாரித்து வருகின்றனர். அத்தகையோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விரைவில் சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, கர்நாடக மற்றும் கோவா மண்டல பெங்களூரு பிரிவு வருமான வரித்துறை அதிகாரிகள் தயாராகின்றனர். தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனை நடக்கும் என்பதை அறிந்த சிலர், வெவ்வேறு இடங்களுக்கு பணத்தை கொண்டு சென்று பதுக்கி வைப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்து, ஒரே நேரத்தில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அதிக அளவில் பணம் செலுத்துபவர்களை கண்காணிக்கவும், தலைமை தேர்தல் ஆணையம், வங்கிகளுக்கு உத்தரவிடும்.
எனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னரே, வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்கவும் சிலர் ஆலோசித்து வருகின்றனர்.

