ADDED : ஏப் 01, 2025 05:51 AM

புதுடில்லி: 'ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா நேற்று கூறியதாவது:
ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை காணப்படும். இந்த காலகட்டத்தில், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், ம.பி., மஹாராஷ்டிரா, உ.பி., பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை காணப்படும்.
உ.பி., ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், இந்த கால கட்டத்தில், 10 முதல் 11 வெப்ப அலைகள் இருக்கும். நாடு முழுதும் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுதும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், வெப்ப அலை மற்றும் வெப்பம் தொடர்பான நோய்களை கையாள, மருத்துவமனைகளை தயாராக வைத்திருக்கும்படி, அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு சமீபத்தில் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.