'ட்ரோன்'கள் பறப்பதை கண்காணிக்க வருகிறது புதிய அமைப்பு!உருவாகிறது பிரத்யேக கட்டுப்பாட்டு அமைப்பு
'ட்ரோன்'கள் பறப்பதை கண்காணிக்க வருகிறது புதிய அமைப்பு!உருவாகிறது பிரத்யேக கட்டுப்பாட்டு அமைப்பு
UPDATED : செப் 05, 2026 09:07 PM
ADDED : செப் 05, 2026 09:02 PM
புதுடில்லி: நகரங்கள், விவசாய நிலங்கள் மற்றும் தொழில் பகுதிகள் மேலே அதிக எண்ணிக்கையில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் பறக்க விடப்படும் நிலையில், அவற்றின் போக்குவரத்தை கண்காணித்து நிர்வகிக்க, புதிய தேசிய ட்ரோன் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வீடியோ பதிவு, நில அளவீடு, பூச்சிக்கொல்லி தெளிப்பு உள்ளிட்ட பணிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. வணிக ரீதியிலான பொருட்கள் டெலிவரி மற்றும் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்களும் பல்வேறு இடங்களில் சோதனை முயற்சியில் உள்ளன. சமீபத்தில், அசாம், நாகாலாந்து ஆகிய மலை மாநிலங்களில், அஞ்சல் துறையே தபால்களை தலைமை அலுவலகத்தில் இருந்து, தொலைதுார மலைகிராம கிளை அலுவலகங்களில் டெலிவரி செய்ய ட்ரோன்களை முயற்சித்து பார்த்துள்ளன.
கடந்த ஜூலையில் உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி, நகர மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்தை மாற்றும் வகையில் பறக்கும் சிறிய ரக டாக்சிகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக கூறினார். எனவே, இவை அதிகளவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதால், குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த தேவையை கருதி, ஆளில்லா விமான போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பை தேசிய அளவில் உருவாக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தற்போதுள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பை போலவே இருக்கும். ஆனால், வழக்கமான விமானங்களுக்கு பதில், 1,000 அடிக்குள் குறைந்த உயரத்தில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பறக்கக்கூடிய சிறிய ட்ரோன்களின் இயக்கத்தை நிர்வகிப்பதே இதன் நோக்கம்.
இந்த அமைப்பை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு முறைகள் தொடர்பாக, உலகில் உள்ள நிறுவனங்களிடம் ஆலோசனை பெறும் நடவடிக்கையை விமான நிலைய ஆணையம் மேற்கொண்டுள்ளது. எதிர் காலத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சிறிய ட்ரோன்கள் குறைந்த உயரத்தில் பறக்கும் சூழல் உருவாகலாம்.
இவற்றை தற்போதுள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் மூலமே நிர்வகிக்க முயற்சித்தால், ட்ரோன்களில் விலை உயர்ந்த மற்றும் அதிக எடை கொண்ட கூடுதல் உபகரணங்களை பொருத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என, நிபுணர்கள் கூறியுள்ளனர். இது ட்ரோன்களின் இயக்கத்தை பாதிக்கும் என்பதால், ட்ரோன்களுக்காக தனித்துவமான, பெரும்பாலும் மென்பொருள் அடிப்படையிலான தானியங்கி அமைப்பை உருவாக்க விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த அமைப்பு ட்ரோன்களின் இயக்கத்தை கண்காணிப்பதுடன், நிகழ்நேரத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், ட்ரோன் இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் உதவும். புதிய ஆளில்லா விமான போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பில் மூன்று முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்று, ட்ரோன் அனுமதிக்கப்பட்ட பகுதிக்குள் மட்டுமே பறப்பதை உறுதி செய்யும் தொழில்நுட்பம். எல்லையை நெருங்கும்போது, அதை இயக்கும் விமானிக்கு இந்த அமைப்பு எச்சரிக்கை விடுக்கும். இரண்டாவது, குறிப்பிட்ட வான்வெளியில் பறக்கும் ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் வழக்கமான விமானங்களின் இருப்பிடத் தகவல்களை அங்கீகரிக்கப்பட்டவர்கள் நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம், குறிப்பிட்ட பகுதியில் வானில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக கண்காணிக்க முடியும். மூன்றாவது, உரிய அனுமதி இல்லாத ட்ரோன் பறக்க தொடங்குவதைத் தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ட்ரோன்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த, அரசு ஏற்கனவே பயன்படுத்தி வரும், 'டிஜிட்டல் ஸ்கை' என்ற டிஜிட்டல் தளமும் புதிய அமைப்புடன் இணைக்கப்பட உள்ளது. நம் நாட்டின் வான்வெளியை பாதுகாப்பானதாக வைத்திருக்க தேவையான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியாக, இந்த ஆளில்லா விமான போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு அமைய உள்ளது.
