எல்லாம் விளம்பரம் தான்... : விமானத்திற்கு மிரட்டல் விடுத்த வேலைவெட்டி இல்லாத நபர் கைது
எல்லாம் விளம்பரம் தான்... : விமானத்திற்கு மிரட்டல் விடுத்த வேலைவெட்டி இல்லாத நபர் கைது
UPDATED : அக் 26, 2024 10:29 PM
ADDED : அக் 26, 2024 10:26 PM

புதுடில்லி: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக டிவியில் வரும் செய்திகளை பார்த்து, தானும் டிவியில் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் விமானத்திற்கு மிரட்டல் விடுத்த, வேலையில்லாத நபரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. இது மத்திய அரசு, விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது. மிரட்டல் தொடர்பாக தினந்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதில், ஒவ்வொரு நாளும் மிரட்டல் விடுக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை மட்டும் மாறி வந்து கொண்டுள்ளது. இது தொடர்பாக டில்லி போலீசார், சத்தீஸ்கரை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு மிரட்டல் தொடர்பாக தினந்தோறும் செய்திகளை வருவதை பார்த்த, டில்லியை சேர்ந்த நபர் ஒருவன், தானும் மற்றவர்களின் கவனத்தை பெறும் வகையில் டிவியில் தோன்ற வேண்டும் என்பதற்காக விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தான். இதனையடுத்து அவனை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலைக்குள் டில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சமூக வலைதளம் மூலம் வந்த இந்த மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தினோம். அதில், இதனை செய்தது டில்லியின் உத்தம் நகரை சேர்ந்த சுபம் உபாத்யாய்(25) என்பது தெரிந்தது. பிளஸ் 2 வரை படித்த இவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவரிடம் நடத்திய விசாரணையில் டிவியில் வரும் செய்திகளை பார்த்துவிட்டு, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்த மிரட்டலை விடுத்ததாக கூறினான். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். எந்த அச்சுறுத்தலுக்கும் இடமில்லை. அனைவரும் விழிப்புடன் இருப்பதுடன், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏதாவது நிகழ்ந்தால், அதனை சம்பந்தப்பட்டவர்களிடம் கூறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் போலீசார் கூறியுள்ளனர்.
30 விமானங்களுக்கு மிரட்டல்
இதனிடையே இன்று 30க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்களின் தலா 11 விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.