இது ராகுலுக்கும் மோடிக்கும் இடையிலான தேர்தல்: அமித்ஷா பேச்சு
இது ராகுலுக்கும் மோடிக்கும் இடையிலான தேர்தல்: அமித்ஷா பேச்சு
ADDED : மே 09, 2024 01:28 PM

ஐதராபாத்: ''இந்த 2024 லோக்சபா தேர்தலானது, ராகுலுக்கும், நரேந்திர மோடிக்கும் இடையிலான தேர்தல்; ராகுலின் 'சைனீஸ் கியாரன்டி' மற்றும் பிரதமர் மோடியின் 'பாரதிய கியாரன்டி'க்கு இடையேயான தேர்தல்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் போன்கீர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: இந்த 2024 லோக்சபா தேர்தலானது, ராகுலுக்கும், நரேந்திர மோடிக்கும் இடையிலான தேர்தல். அதாவது, 'ஜிஹாத்துக்கான ஓட்டு' மற்றும் 'வளர்ச்சிக்கான ஓட்டு' ஆகியவற்றிக்கு இடையிலான தேர்தல். ராகுலின் 'சைனீஸ் கியாரன்டி' மற்றும் பிரதமர் மோடியின் 'பாரதிய கியாரன்டி'க்கு இடையேயான தேர்தல்.
நடந்து முடிந்த 3 கட்ட தேர்தல்களின் முடிவில் நாங்கள் (தேசிய ஜனநாயக கூட்டணி) 200 இடங்களை நெருங்கிவிட்டோம். அடுத்து தெலுங்கானாவிலும் வெற்றிப்பெற்று மொத்தத்தில் 400 இடங்களை கைப்பற்றுவோம். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தெலுங்கானா மக்கள் எங்களுக்கு 4 தொகுதிகளில் வெற்றியை கொடுத்தனர். இந்தமுறை, 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப்பெறுவோம்.
பொய்கள்
காங்கிரஸ் பொய்களை கூறி தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. பிரதமர் மோடி பிரதமரானால், இடஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார் என்கிறார்கள். பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டை ஒருமனதாக வழிநடத்தி வருகிறார்; இடஒதுக்கீட்டை நிறுத்தவில்லை. ஆனால், முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு அளித்து எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை சூறையாடியது காங்கிரஸ் கட்சி. பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்தால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை உயர்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.