ADDED : ஆக 14, 2025 10:34 PM

புதுடில்லி: '' அநீதிக்கு இணங்கி, அடிபணிந்து அல்லது ஒப்புக்கொள்வதை விட, அடங்காமல் இருப்பது மிகவும் நல்லது,''என முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. விவசாயம் உள்ளிட்ட சில சந்தைகளை திறந்து விடும்படி அமெரிக்கா கூறுவதை இந்தியா ஏற்கவில்லை. இச்சூழ்நிலையில், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிக்க இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெஸ்ஸன்ட் கூறும்போது, '' அமெரிக்க சிறந்த நிலையில் இருக்கிறது. பெரிய வர்த்தக ஒப்பந்தம் இதுவரை செய்யவில்லை. ஒப்புக்கொள்ளப்படவில்லை. சுவிட்சர்லாந்துடன் செய்ய வேண்டி உள்ளது. இந்தியா அடங்க மறுக்கிறது,'' எனத் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா அடங்க மறுப்பதாக சிலர் சொல்வதை கேள்விப்படுகிறேன். அநீதிக்கு இணங்கி, அடிபணிந்து அல்லது ஒப்புக்கொள்வதை விட, அடங்காமல் இருப்பது மிகவும் நல்லது என்று நான் சொல்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சசிதரூர் கூறியுள்ளார்.