ADDED : மார் 16, 2024 10:58 PM

மைசூரு: “மைசூரு லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் யதுவீருக்கு ஓட்டுப் போட்டால், சாமுண்டீஸ்வரிக்கு பூப்போட்டது போன்றதாகும்,” என, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:
அரச குடும்பத்தின் யதுவீர், எம்.பி.,யாகிறார் என்பதே, நமக்கு பெருமையான விஷயமாகும். இவருக்கு ஓட்டுப் போடுவது, சாமுண்டீஸ்வரிக்கு பூப்போடுவது போன்றதாகும்.
நாம் அவருக்கு ஓட்டுப்போட்டு அரச குடும்பத்துக்கு நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்.
பத்திரிகையாளரான பிரதாப் சிம்ஹாவை, ஒரு ரூபாய் வாங்காமல் வெற்றி பெற வைத்தோம். அவரும் ஒரு ரூபாய் வாங்காமல், வளர்ச்சிப் பணிகளை செய்தார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். யதுவீருக்கு வாய்ப்பு தாருங்கள். உங்கள் வீடு தேடி வருவார்.
மஹாராஜா எம்.பி.,யானால், வளர்ச்சியின் கதவு திறக்கும். யதுவீருக்கு பிரதமர் நரேந்திர மோடியே மதிப்பளிக்கிறார்.
மைசூரு மன்னர் குடும்பத்தின் பங்களிப்பு குறித்து, உங்களுக்கு தெரியும்.
இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தியதே, மைசூரு மஹாராஜாதான். நாங்கள் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரை பக்தியுடன் பார்த்தோம். மைசூரு மன்னர் குடும்பத்துடன், இப்போதும் நல்லுறவு உள்ளது.
எங்கள் கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் மனஸ்தாபம் இல்லை. ஏற்கனவே பா.ஜ.,வினர் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டனர். கோலார், மாண்டியா, ஹாசனில் ம.ஜ.த., வெற்றி பெறும். 28 தொகுதிகளிலும், கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், அனைத்துப் பணிகளும் நடக்கும்.
யார் பணத்தாசை காண்பித்தாலும், நாம் ஒன்று சேர்ந்து, யதுவீரை வெற்றி பெற வைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

