ADDED : பிப் 07, 2024 11:09 PM
லோக்சபா தேர்தலில் கட்சிகள் சார்பில் போட்டியிட தங்கமான நகரில் யாரும் ஆர்வம் காட்டுவதாக தெரியல.
ஆனால், வேட்பாளராக போட்டியிடுவோர் யாராக இருந்தாலும், அவர்களிடம் வழக்கம் போல தலைவர்களாக பவனி வரும் சிலர், தங்களின் செல்வாக்கை காட்டுவாங்க. இது பேரம் பேசும் நேரம் என்பதை பயன்படுத்திக்குவாங்க.
காவி கட்சியில் இரு கோஷ்டி. இவர்களை ஒன்று சேர்க்க வேண்டிய அசெம்பிளி தேர்தல் நேரத்தில் எலியும் பூனையும் ஒரு கூட்டில் இல்லாமல் போனது. இதனால் சில பேர் 'கை' பக்கம் இருந்ததாக அவநம்பிக்கை ஏற்பட்டது.
கைகாரங்க வெற்றியில் '40 சி' கரைந்தது. இதில் சில பூவுக்காரர்களை செயல் படாமல் தடுத்து நிறுத்தவும் பட்டுவாடா போனதாம்.
கிராமத்தில் பூவை வளர்த்தவர் சீட் கிடைக்காமல் போனதால், ஓட்டின் ரூட்டு நீலக் கொடிக்கு மாற வெச்சாங்க. அப்படியும் அங்கே கிராமத்தில் எதிர்ப்பார்த்த கணிசமான ஓட்டு கிடைக்கல.
லோக் தேர்தலில் வாக்காளர்களுக்கு நேரடியாக பட்டுவாடா போய் சேரனும் என்பதே கைகாரர்கள் திட்டம். எனவே ஆதரிக்கும் கட்சி தலைவர்களின் நேரத்துக்கு அடிப்பணிய வாய்ப்பு இல்லை என்கிறாங்க.
***
ஓட்டு கேட்க வருவாங்க!
விரைவில் உரிகம் ரயில் நிலையம் புதிய கட்டடம் திறக்கப்படும். ரா.பேட்டையில் உள் விளையாட்டு அரங்கமும் திறக்கப்படும். மைன்ஸ் தொழிலாளர் வீடுகளுக்கு பொசிஷன் சர்ட்டிபிகேட் வழங்குவாங்க.
சைனாட் மண்ணில் தங்கம் எடுக்க டெண்டர் ரெடி ஆகும். இவை எல்லாமே லோக் தேர்தலுக்காக காத்திருக்கும் காட்சிகள். இதையெல்லாம் காட்டி ஓட்டு கேட்க வருவாங்க.
பெங்களூரு - சென்னை விரைவு சாலை திட்டம்; குப்பம் - மாரி குப்பம் ரயில் பாதை இணைப்பு திட்டம், இன்னும் ஓரிரு மாதங்களில் முடியும் என்கிற நிலையில் இல்லை. இதனால் இவைகள் மேலும் தாமதமாகலாமென சொல்லிட்டாங்களாம்.
இந்த திட்டங்கள் என்னமோ பெருசு. இது தேர்தல் பிரசாரத்துக்கு பயனாகாது.
அட்லீஸ்ட், உள்ளூர் காரர்களுக்கு ம.அரசின் பெமலில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி இருந்தால், கோலார் தொகுதியே தலையில் தூக்கி வெச்சு கொண்டாடி இருக்கும். இதனை பூக்காரர் செய்ய தவறிட்டாரே.
****
பாதுகாப்பு இல்லாத மருத்துவமனை!
அரசு மகப்பேறு மருத்துவமனையில் சில வருஷத்துக்கு முன்னாடி, குழந்தை ஒண்ணு திருடு போனது. அது இன்னும் கூட கிடைக்கல.
இதுக்கு பிறகாவது இந்த மருத்துவமனையில் பாதுகாப்புக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லையாம்.
ஊர்க்காவல் படையினரை பாதுகாப்பு பணியில் அமர்த்துவதாக சொன்னாங்க. இன்னும் கூட அது அமலுக்கு வரவே இல்லை.
அதேபோல் சாம்பியன் சாலையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனை பாதுகாப்பு இல்லாமல் இருக்குது. சட்டவிரோத கும்பல் பதுங்ற இடமாக மாறி இருக்குது. காம்பவுண்ட் சுவர் இடிந்து பல மாதங்கள் ஆகிறது. இது யார் கண்ணுக்குமா தெரியாமல் போனது.

