ADDED : மார் 07, 2024 03:45 AM
பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடம் ஒப்படைக்கும் மனு மீது விசாரணையை ஏப்ரல் 6ம் தேதிக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், பவளம், முத்து போன்றவைகளால் செய்யப்பட்ட நகைகள், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நகைகளை, நேற்று தமிழக அரசிடம் ஒப்படைப்பதற்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்திருந்தது. இதற்காக தமிழக அதிகாரிகளை வரும்படியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இதற்கிடையில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், தமிழக அரசிடம் நகைகளை ஒப்படைக்க, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் இடைக்கால தடை பிறப்பித்தது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் முன்னிலையில், இந்த மனு மீது நேற்று விசாரணை நடக்கவிருந்தது. ஆனால், உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ஏப்ரல் 6ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

