UPDATED : செப் 18, 2024 09:53 PM
ADDED : செப் 18, 2024 07:39 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஏழு மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில், இன்று (செப்.,18) நடந்த முதற்கட்ட ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்ததாகவும் 59 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பா.ஜ., மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும் காங்., - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுவதால், மும்முனை போட்டி நிலவுகிறது. 90 சுயேச்சைகள் உட்பட 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம், 23.27 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஏழு மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில், இன்று (செப்.,18) முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. 3,276 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.
ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு அதிகாரிகள் கூறுகையில், இத்தேர்தலில் 59 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அமைதியாக தேர்தல் நடந்தது. கிஷ்திவாரில் அதிகபட்சமாக 77 சதவீத ஓட்டுகளும், குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46 சதவீத ஓட்டுகளும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
2019ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அங்கு சட்டசபை தேர்தல் நடக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.