ADDED : பிப் 01, 2025 11:47 PM

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் இந்த மாநிலத்துக்கு அதிக திட்டங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உணவு பதப்படுத்தலை ஊக்குவிக்கும் விதமாக பீஹாரில், 'தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம்' அமைக்கப்படும்.
நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.,களை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக பாட்னா ஐ.ஐ.டி.,யின் திறன் விரிவுபடுத்தப்படும். இதில் 6,500 மாணவர்களுக்கு இடமளிக்க ஐந்து ஐ.ஐ.டி.,களில் கூடுதல் உட்கட்டமைப்பு உருவாக்கப்படும்.
பீஹாரின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக பாட்னா விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். நான்கு புதிய 'க்ரீன்பீல்ட்' எனப்படும் பசுமை விமான நிலையங்கள் மற்றும் பிஹ்தாவில் 'பிரவுன்பீல்ட்' எனப்படும் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக ஒரு விமான நிலையம் அமைக்கப்படும்.
மிதிலாஞ்சல் பகுதியில் நடந்துவரும் சுற்றுச்சூழல் வள மேலாண்மை திட்டமான 'கோசி' கால்வாய் திட்டத்துக்கு நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.