மத்திய அரசு ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்' ; 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்' ; 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
ADDED : அக் 02, 2025 07:04 AM

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ., எனப்படும், அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில், 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை ஆகிய 6 மாதங்களின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும்.
மத்திய அரசின் புள்ளியியல்துறை அதிகாரிகள் நாடு முழுதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் வைத்து ஒவ்வொரு மாதமும் அகவிலைப்படி உயர்வை நிர்ணயம் செய்கின்றனர்.
அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வை கடந்த ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஒப்புதலால் பணியில் இருக்கும் மற்றும் பணி ஓய்வுபெற்ற 1.15 கோடி அரசு ஊழியர்கள் பயனடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை வரக்கூடிய சூழலில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஜி.எஸ்.டி., வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.
'வந்தே மாதரம்' கொண்டாட்டம்
அதேபோல், 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டை, நாடு முழுதும் கொண்டாடவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 'சுதந்திரப் போராட்டத்தின் போது, 'வந்தே மாதரம்' பாடல் முக்கிய பங்கு வகித்தது. இதை கருத்தில் கொண்டு, இந்த பாடலின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில், நாடு தழுவிய கொண்டாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது' என, தெரிவித்தார்-.
பருப்பு கொள்முதல்
மேலும், பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வகையில், 2030 - 31ம் ஆண்டுக்குள், உற்பத்தியை 350 லட்சம் டன்களாக உயர்த்தும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விதைகளை மேம்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உறுதியான கொள்முதல் வாயிலாக 2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்த திட்டத்துக்கு 11,440 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
57 கேந்திரிய வித்யாலயா
நாடு முழுதும் புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஏழு பள்ளிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நிதி உதவி செய்யும் என்றும், மீதமுள்ள பள்ளிகளுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத மாவட்டங்களில் துவக்கப்படும் இந்த பள்ளிகள் வாயிலாக 86,000 மாணவர்கள் பயனடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.