திருப்பதி கோவிலை வைத்து கல்லா கட்டிய ஜெகன் கட்சி பிரமுகர்; மீண்டும் சர்ச்சையில் ஒய்.எஸ்.ஆர்., காங்.,
திருப்பதி கோவிலை வைத்து கல்லா கட்டிய ஜெகன் கட்சி பிரமுகர்; மீண்டும் சர்ச்சையில் ஒய்.எஸ்.ஆர்., காங்.,
UPDATED : அக் 20, 2024 04:24 PM
ADDED : அக் 20, 2024 04:20 PM

திருமலை: வி.ஐ.பி., தரிசன டிக்கெட் பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் எம்.எல்.சி., ஷாகியா கனம் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் போது, பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலின் பிரசாதமான லட்டில் மாட்டு கொழுப்பு மற்றும் மீண் எண்ணெய் கலந்ததாக எழுந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இது திருப்பதி கோவில் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் ஒய்.எஸ். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அரசியலுக்காக சந்திரபாபு நாயுடு இவ்வாறு செய்து விட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., தரிசனம் மற்றும் வேதா ஆசிர்வச்சனம் பூஜைக்காக அனுமதி சீட்டு பெற்று தருவதாகக் கூறி, ரூ.65 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதாக ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.சி., ஷாகியா கனம் உள்பட 3 பேர் மீது ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று ஸ்ரீவாரி கோவில் அருகே சாய் குமார் ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, லட்டு விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ள ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸூக்கு, இந்த சம்பவமும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.