ஜெகன் திருப்பதி பயணம் ரத்து ஏன்: வேறு காரணம் சொல்கிறார் நாயுடு!
ஜெகன் திருப்பதி பயணம் ரத்து ஏன்: வேறு காரணம் சொல்கிறார் நாயுடு!
ADDED : செப் 27, 2024 09:58 PM

விஜயவாடா: ''திருப்பதி வெங்கடாசலபதி மீது உண்மையான பக்தியும் நம்பிக்கையும் உள்ளது என்று உறுதிமொழி பத்திரம் தர ஜெகன்மோகன் தயாரில்லை. அதனால் தான் பயணத்தை ரத்து செய்திருக்கிறார்,'' என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஆந்திர அரசு விதித்த கெடுபிடி காரணமாக திருப்பதி கோவிலுக்கு செல்வதை ஒத்திவைப்பதாக ஜெகன்மோகன் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்து முதல்வர் சந்திரபாபு கூறியதாவது: கடந்த காலங்களில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறி ஜெகன்மோகன் திருப்பதி வந்தார். அதனையே திருப்பி செய்ய நினைப்பது நியாயமற்றது. வீட்டில் பைபிள் படித்து கொண்டு, மற்ற மதங்களுக்கு மரியாதை அளிக்கும்போது, மற்ற மத வழிபாட்டு முறைகளையும், திருப்பதி தேவஸ்தானத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுவது முக்கியம். ஹிந்துவாக நான் வீட்டில் பூஜை செய்தாலும், சர்ச் அல்லது மசூதி செல்லும் போது அவர்களின் பாரம்பரியத்தை நான் மதிப்பேன். நாம் சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும்.
லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்படவில்லை என சொல்கிறார். ஆனால் ஏஆர் நிறுவனம் அனுப்பிய 8 நெய் டாங்கரில் 4 மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கைக்கு பிறகு 4 டாங்கர்கள் திருப்பி அனுப்பப்பட்டது. ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் தான் தற்போது வெளியேவந்துள்ளது. ஜெகன் ஆட்சியில் டெண்டர் விதிமுறைகள் மாற்றப்பட்டன. பிரசாதத்தின் தரம் குறித்து பக்தர்கள் புகார் கூறிய போது, அது சரி செய்யப்படவில்லை. பிரசாதத்தில் சேர்க்கப்பட்ட பொருட்கள் தரமற்றவை. இது போன்று பல கோவில்களில் இதுபோன்று நடந்துள்ளது.
ராமதீர்த்தம் நகரில் ராமர் சிலை அகற்றம் குறித்தும், அந்தர்வாடிமற்றும் ஆனந்த்பூர் மாவட்டங்களில் தொண்டு நிறுவனங்கள் தீ வைத்து எரித்தது குறித்தும் முறையாக விசாரணை நடத்தவில்லை. ஜெகன் கட்சியை சேர்ந்த ஈஸ்வர் ரெட்டி, தொண்டு நிறுவனத்திற்கு தீ வைத்ததை ஒப்பு கொண்டுள்ளார். நீங்கள் அரசியல்வாதியாக இருக்க தகுதியானவர் தானா? ஹிந்துக்களின் மனதை காயப்படுத்த யார் அதிகாரம் கொடுத்தார்கள்.
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க ஜெகனுக்கு ஆர்வம் இல்லை. இதனால் தான் அவர் திருப்பதி வருவதை தவிர்க்கிறார். சர்ச்கள் மற்றும் மசூதிகளை அந்தந்த மதத்தை சேர்ந்தவர்கள் நிர்வகிப்பது போல், கோவில்களையும் ஹிந்துக்கள் நிர்வகிக்க சட்டம் கொண்டு வருவோம். தலித்கள் கோவிலுக்குள் நுழைவதை தடுக்கவில்லை. அது போன்று எந்த அறிக்கையும் விடவில்லை. ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தியவர்கள் யாரையும் விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
வேற்று மதத்தவர் திருப்பதி கோவிலுக்கு சென்றால், உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்து தர வேண்டும். 'வெங்கடாசலபதி மீது உண்மையான பக்தியும் நம்பிக்கையும் கொண்டுள்ளேன்' என்று உறுதிமொழி படிவம் கொடுத்தால் மட்டுமே சுவாமியை தரிசிக்க முடியும். இந்த படிவம் தர ஜெகன் தயாரில்லை என்று சந்திரபாபு குற்றம் சாட்டியுள்ளார்.

