திருமலைக்கு செல்ல ஜெகன்மோகனுக்கு அனுமதி மறுப்பு? லட்டு விவகாரத்தில் தொடரும் சர்ச்சை
திருமலைக்கு செல்ல ஜெகன்மோகனுக்கு அனுமதி மறுப்பு? லட்டு விவகாரத்தில் தொடரும் சர்ச்சை
ADDED : செப் 28, 2024 12:22 AM
அமராவதி: லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் தரினசத்துக்கு செல்ல முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டிருந்தார். ஆனால், மாநில அரசு தனக்கு அனுமதி மறுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கட்சி நிர்வாகிகளிடம் சமீபத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தது' என, குற்றஞ்சாட்டினார்.
இதை திருப்பதி தேவஸ்தானமும் உறுதிசெய்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் திட்டவட்டமாக மறுத்தார். இந்த விவகாரம் ஆந்திராவில் மட்டுமல்லாமல், நாடு முழுதும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, திருமலை கோவிலின் புனிதத்தன்மையை மீட்டெடுக்க தேவஸ்தானம் சார்பில் மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டது.
இதற்கிடையே, 'சந்திரபாபு நாயுடு செய்த பாவத்துக்கு பரிகாரமாக, ஆந்திரா முழுதும் உள்ள கோவில்களில் செப்., 28ல் பூஜைகள் நடத்தப்படும்' என, முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன் சமீபத்தில் அறிவித்திருந்தார். தொடர்ந்து, அன்றைய தினம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரேம்குமார் ஜெயின் கூறுகையில், 'திருமலைக்கு வருகை தரும் ஜெகன்மோகன், அதற்கான பரிகாரம் செய்ய வேண்டும். மன்னிப்பு சடங்குகளில் பங்கேற்பதுடன், ஏழுமலையானை நம்புவது தொடர்பான நம்பிக்கை பிரகடனத்தில் அவர் கையெழுத்திட வேண்டும். இல்லையென்றால் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்' என, தெரிவித்திருந்தார்.
மற்றொரு செய்தித் தொடர்பாளர் கொம்மரெட்டி பட்டாபிராம் கூறுகையில், 'ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் என்பது எங்களுக்குத் தெரியும். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனாலும், வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் ஏழுமலையானை தரிசனம் செய்ய நினைத்தால், அவர் மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறி கையெழுத்திட வேண்டும்; இது ஒரு வழக்கம்' என்றார்.
இந்நிலையில், அமராவதியில் செய்தியாளர்களிடம் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று கூறியதாவது:
திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க இன்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், என் பயணத்துக்கு தெலுங்கு தேசம் அரசு அனுமதி மறுத்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் முதல் 100 நாட்கள் ஆட்சியில், மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை திசை திருப்பவே, அவர் லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.
லட்டு விவகாரத்தில், சந்திரபாபு நாயுடு பொய்க்கு மேல் பொய் பேசுகிறார். கோவிலின் புனிதத்தன்மையை அவர் கெடுத்துவிட்டார். முதல்வராக இருக்கும் ஒருவர், வாய் கூசாமல் இப்படி பொய் பேசலாமா?
கடவுள் பெயரில் அவர் அரசியல் செய்கிறார். திருப்பதி கோவிலுக்கு பலமுறை சென்று தரிசனம் செய்துள்ளேன். தற்போது, எனக்கு அனுமதி தர மறுக்கின்றனர். லட்டு விவகாரத்தில் நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி மறுக்கவில்லை!
ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனுமதி மறுக்கப்படவில்லை. அவர் தவறான தகவல்களை தெரிவிக்கிறார். திருப்பதி தேவஸ்தானம் விதிகளின்படி, ஹிந்து அல்லாதோர் கோவிலுக்கு வரும்போது, உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த நடைமுறை காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஜெகன் மோகன் முதல்வராக இருந்த போதும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ஜியோத்ஸ்னா திருனகரி,
செய்தித் தொடர்பாளர், தெலுங்கு தேசம்