sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துவங்கிய உடன் பார்லிமென்டின் இரு சபைகளும் ஒத்திவைப்பு

/

துவங்கிய உடன் பார்லிமென்டின் இரு சபைகளும் ஒத்திவைப்பு

துவங்கிய உடன் பார்லிமென்டின் இரு சபைகளும் ஒத்திவைப்பு

துவங்கிய உடன் பார்லிமென்டின் இரு சபைகளும் ஒத்திவைப்பு

33


UPDATED : நவ 26, 2024 11:49 AM

ADDED : நவ 25, 2024 11:18 PM

Google News

UPDATED : நவ 26, 2024 11:49 AM ADDED : நவ 25, 2024 11:18 PM

33


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதானி மீதான லஞ்ச புகார் குறித்து, விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி, குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கினர். இதனால், இரு சபைகளின் அலுவல்களும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதையொட்டி பார்லிமென்டிற்கு வந்த பிரதமர் மோடி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், பார்லிமென்டை முடக்க முயற்சிக்கின்றனர். அவர்களது உள்நோக்கம் என்ன என்பது மக்களுக்கு தெரியும்.

அதனால் தான், சரியான நேரத்தில் எதிர்க்கட்சிகளை மக்கள் தண்டிக்கின்றனர். எதிர்க்கட்சியினர் இனியாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின், காலை 11:00 மணிக்கு சபை அலுவல்கள் துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி சபைக்குள் நுழைந்தார்.

கோஷம்

அப்போது, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ.,வால் முன்வைக்கப்பட்ட, 'ஒன்றாக இருப்பதே பாதுகாப்பு' என்ற கோஷத்தை பா.ஜ., - எம்.பி.,க்கள், எழுப்பியபடியே கைதட்டி பிரதமரை வரவேற்றனர்.

அதற்கு பதிலடியாக, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், 'அதானி... அதானி' என, முழக்கமிட்டனர்.

பின் சபாநாயகர் ஓம் பிர்லா வந்ததும், தேசிய கீதத்துடன் சபை நடவடிக்கைகள் துவங்கின. முதல் அலுவலாக, மறைந்த எம்.பி.,க்களுக்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.

Image 1349044


அதில் இரண்டு பேர் சிட்டிங் எம்.பி.,க்கள் என்பதால் சபை உடனடியாக ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என குரல் எழுப்பியபடி கலைந்து சென்றனர்.

மீண்டும் சபை கூடியபோது, உ.பி., சம்பல் கலவரம், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

சபாநாயகர் இருக்கையில் இருந்த பா.ஜ., உறுப்பினர் சந்தியா ரே, எதிர்க்கட்சி எம்.பி.,க்களை அமைதி காக்கும்படி கோரிக்கை விடுத்தார். அவர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து சபையை நாளை வரை ஒத்திவைத்தார்.

நோட்டீஸ்


ராஜ்யசபா, காலை கூடியதுமே பிரச்னை கிளம்பியது. அதானி லஞ்ச விவகாரம், மணிப்பூர், உ.பி., மதக்கலவரம், வயநாடு இயற்கை பேரிடர் என, பல்வேறு விவகாரங்கள் குறித்து எம்.பி.,க்கள் நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

அதிலும், அதானி விவகாரம் குறித்து சபை விதி எண், 267ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி, 13 எம்.பி.,க்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர்.

இவற்றை, சபை தலைவர் ஜக்தீப் தன்கர் நிராகரித்தார். இந்த நோட்டீஸ்கள் அனைத்துமே சபை விதிகளின்படி இல்லை என்றும் கூறினார்.

இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச எழுந்தார். அவரை நோக்கி, ''அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு, 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், பல்வேறு முக்கிய விஷயங்களை பேச வேண்டியுள்ளது. நீங்கள் விபரமறிந்தவர். சபையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்,'' என, ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டார்.

அதற்கு மல்லிகார்ஜுன கார்கே, ''கடந்த 75 ஆண்டுகளில் எனக்கு, 54 ஆண்டுகள் பொது வாழ்க்கை அனுபவம் உள்ளது. எதைப் பேச வேண்டுமென்பது குறித்து எனக்கும் தெரியும்,'' என கூறிவிட்டு பேசத் துவங்கினார்.

உடனே, ''அதானி விவகாரமா,'' என ஜக்தீப் தன்கர் கேட்டார். அதற்கு, ''ஆமாம்,'' என மல்லிகார்ஜுன கார்கே கூற, ''அதற்கு அனுமதியில்லை,'' என ஜக்தீப் தன்கர் கூறினார்.

வாக்குவாதம்


அதையும் மீறி பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ''அதானி விவகாரத்தால், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மரியாதை குறைந்து விட்டது. அதானிக்கு பிரதமர் ஆதரவு தருகிறார்.

''எனவே, இந்த விஷயம் குறித்து சபையில் பேசுவதற்கு நீங்கள் அனுமதி அளித்தால், அது எவ்வளவு முக்கியமான விவகாரம் என்பதை நாங்கள் விளக்குவோம்,'' என்றார்.

இதை ஏற்காத சபைத்தலைவர், அமளிக்கு மத்தியில், 15 நிமிடங்களுக்கு சபையை ஒத்தி வைத்தார். பின்னர் மீண்டும் சபை கூடியபோது, எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கும், சபை தலைவர் ஜக்தீப் தன்கருக்கும் வாக்குவாதம் தீவிரமடைந்தது.

இதையடுத்து, நாளை வரை சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆயுட்காலத்தை நீட்டிக்க வேண்டும்

எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது சேம்பரில் சந்தித்து, வக்பு மசோதா குறித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், 'இந்த கூட்டத்தொடரில், வக்பு மசோதா மீதான ஆய்வுகளை இன்னும் தொடர வேண்டியுள்ளது. அவசர கதியில் நிறைவேற்ற அரசு முயற்சிக்கிறது. அதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது. மசோதாவை ஆய்வு செய்து வரும் கூட்டுக்குழுவின் ஆயுட்காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட சபாநாயகர், 'அனைத்து தரப்பினரது கருத்துக்களை கேட்டபிறகே, வக்பு மசோதா குறித்த அறிக்கை தயார் செய்யப்படும்' என வாக்குறுதி அளித்ததாக எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.



பிரியங்கா வரவில்லை

வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரியங்கா, நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இன்று, அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்ட நிகழ்ச்சி இருப்பதால் அனைவரும் அங்கு இருப்பர்.இரு சபைகளிலும் அலுவல்கள் இருக்காது என்பதால், இன்றும் பதவியேற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, பிரியங்காவும், மஹராஷ்டிராவின் நான்டெட் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் வென்ற சவான் ரவீந்திர வசந்த் ராவும், லோக்சபாவில் சபாநாயகர் ஓம்பிர்லா முன்னிலையில் நாளை பதவியேற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us