ADDED : ஜூலை 10, 2025 05:58 AM
சுரு:  ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில், சூரத்கர் விமான தளத்திலிருந்து புறப்பட்ட  நம் விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம், மதியம் 1:25 மணியளவில் பனோடா கிராமத்தின் அருகே விழுந்தது.
இரட்டை இருக்கைகள் கொண்ட அந்த விமானம், நடுவானில் சமநிலையை இழந்து, ரத்தன்கர் பகுதியில் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.
இதை நேரில் கண்ட கிராம மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நொறுங்கிய விமான பாகங்களுக்கு அருகே இரண்டு விமானிகளின் உடல் மீட்கப்பட்டன.
ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் பகடே மற்றும் முதல்வர் பஜன்லால் சர்மா இரங்கல் தெரிவித்தனர்.
விபத்திற்கான காரணத்தை அறிய, விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டில் ஜாகுவார் விமானம் விபத்திற்குள்ளாவது இது மூன்றாவது முறை.

