'ஜெய் ஸ்ரீராம், ஜெய் பீம்' கோஷம்: காங்., - பா.ஜ.,வினரால் சலசலப்பு
'ஜெய் ஸ்ரீராம், ஜெய் பீம்' கோஷம்: காங்., - பா.ஜ.,வினரால் சலசலப்பு
ADDED : பிப் 13, 2024 07:03 AM

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு காவி சால்வை அணிந்து வந்த பா.ஜ.,வினர் 'ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் எழுப்பினர். பதிலுக்கு, 'ஜெய் பீம், ஜெய் பீம்' என, காங்கிரசார் கோஷம் எழுப்பியதால், சலசலப்பு ஏற்பட்டது.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், சட்டசபையில் நேற்று உரையாற்றினார். பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் காவி சால்வை அணிந்து அமர்ந்திருந்தனர்.
சில உறுப்பினர்கள், சட்டசபைக்குள் நுழையும்போதே 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பினர். கவர்னர் தன் உரையை வாசித்துவிட்டுத் திரும்பும்போது, அனைத்து பா.ஜ., உறுப்பினர்களும், 'ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் எழுப்பினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர்கள், 'ஜெய் பீம், ஜெய் பீம்' என்று கோஷம் எழுப்பினர். 'எங்களுக்கு அரசியல் அமைப்பு தான் முக்கியம், அதை உருவாக்கிய அம்பேத்கர் தான் முக்கியம்' என, அமைச்சர்கள் பைரதி சுரேஷ், நாகேந்திர உரத்த குரலில் கூறினர்.
'அவரை ஒழித்து கட்டியது நீங்கள் தானே' என, பா.ஜ., உறுப்பினர் விஸ்வநாத், பைரதி சுரேஷை பார்த்துக் கூறினார். சட்டசபையில் இருந்து, கவர்னர் செல்லும் வரையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரத்த குரலில் மாறி, மாறி கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
இதனால், சட்டசபையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, சபாநாயகர் காதர், முதல்வர் சித்தராமையா ஆகியோர் சிரித்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளே ஒரு விதமான பரபரப்பு நிலவியது.