செய்யாத குற்றத்திற்கு சிறையா? இழப்பீடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் குவியும் வழக்குகள்
செய்யாத குற்றத்திற்கு சிறையா? இழப்பீடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் குவியும் வழக்குகள்
UPDATED : அக் 29, 2025 03:21 AM
ADDED : அக் 29, 2025 03:19 AM

விசாரணை நீதிமன்றங்கள் விதித்த மரண தண்டனையை ரத்து செய்து நிரபராதி என விடுவிக்கப்பட்டவர்கள், பல ஆண்டுகளாக அனுபவித்த சிறைவாசத்துக்கு இழப்பீடு தரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பம் பகுதியின் சுருளி அருகே, கடந்த 2011ல் இரு கல்லுாரி மாணவர்களை கொலை செய்த வழக்கில் திவாகர் என்ற கட்ட வெள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கை விசாரித்த தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், 2019ல் சென்னை உயர் நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இறுதியாக, திவாகர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இவ்வழக்கை விரிவாக விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலையில் திவாகருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது. அத்துடன் அவரை கொலை வழக்கில் இருந்தும் விடுதலை செய்தது.
இதே போல, மஹாராஷ்டிராவில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக, 41 வயது நபருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
உத்தர பிரதேசத்தில், 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சஞ்சய் என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த மூன்று பேர் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 'குற்றம் இழைக்காமல் பல ஆண்டுகளாக அனுபவித்த சிறைவாசத்துக்கு இழப்பீடு தர வேண்டும்' என கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்த விவகாரத்தில் எப்படி இழப்பீடு வழங்குவது என்பது குறித்து, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி யோசனை தெரிவிக்க வேண்டும் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உதவ வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -:

