ADDED : மார் 02, 2024 10:24 PM

ஷிவமொகா: ''என் மனைவி கீதா எம்.பி.,யாக வேண்டும். அரசியலில் அவர் வளர வேண்டும். ஆனால் நான் அரசியலுக்கு வரமாட்டேன்,'' என, நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்தார்.
கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி கீதா. இவர், மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளாவார். இவரின் இரு சகோதரர்களான குமார் பங்காரப்பா பா.ஜ.,விலும்; மது பங்காரப்பா காங்கிரசிலும் உள்ளனர். மது பங்காரப்பா தற்போது பள்ளி கல்வி அமைச்சராக உள்ளார்.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில் ஷிவமொகாவில் ம.ஜ.த., வேட்பாளராக கீதா போட்டியிட்டார். ஆனால், பா.ஜ.,வின் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவிடம் தோல்வியை தழுவினார்.
கடந்தாண்டு ஏப்ரலில் ம.ஜ.த.,வில் இருந்து விலகிய கீதா, காங்கிரசில் இணைந்தார்.
இந்நிலையில், அமைச்சர் மது பங்காரப்பா பிறந்த நாளை ஒட்டி, ஷிவமொகாவிற்கு நேற்று விழா நடந்தது. இதில் சிவராஜ் குமார், அவரது மனைவி கீதா ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது சிவராஜ் குமார் அளித்த பேட்டி:
எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. கஷ்டம் என்று வருபவர்களுக்கு பணம் அனுப்புவேனே தவிர, எனக்கு அரசியல் தெரியாது.
ஆனால் என் மனைவி கீதா, அரசியலுக்கு வர வேண்டும். அவரது உடலில் அரசியல் ரத்தம் ஓடுகிறது. அவரை எம்.பி.,யாகவே அல்லது எம்.எல்.ஏ.,வாகவோ பார்க்க விரும்புகிறேன்.
ஷிவமொகாவில் காங்கிரஸ் மேலிடம் அவருக்கு சீட் கொடுத்தால், எம்.பி.,யாக பார்க்க விரும்புகிறேன்.
அவர் எம்.பி.,யானால், மற்ற பெண்களுக்கு முன் மாதிரியாக திகழ்வார். கணவனாக அவரை ஆதரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கீதா சிவராஜ் குமார் கூறுகையில், ''ஷிவமொகாவில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைவர்கள் முடிவெடுப்பர். ஏற்கனவே இங்கு பல சமூக பணிகளை செய்து வருகிறேன். வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன்,'' என்றார்.
பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறுகையில், ''ஷிவமொகா லோக்சபா தொகுதி வேட்பாளர் பெயரை, கட்சி மேலிட தலைவர்கள் ஏற்கனவே பட்டியலை தயாரித்து வருகின்றனர்.
''மாவட்ட தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. கீதா சிவராஜ் குமார் உட்பட பலரின் பெயர் அடிபடுகின்றன,'' என்றார்.

