ஜெய்ப்பூரின் 'யுனெஸ்கோ' அந்தஸ்துக்கு ஆபத்து; ஆக்கிரமிப்புகளால் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்
ஜெய்ப்பூரின் 'யுனெஸ்கோ' அந்தஸ்துக்கு ஆபத்து; ஆக்கிரமிப்புகளால் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்
ADDED : அக் 02, 2026 06:14 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள, 'மதில் சூழ்ந்த நகரம்' பகுதியில், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், இதனால் பாரம்பரிய நகரம் என்பதற்கான, 'யுனெஸ்கோ' அங்கீகாரம் ரத்தாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனை, உயர்ந்து நிற்கும் கோட்டைகள், தனித்துவமான கட்டடங்கள் உலக புகழ்பெற்றவை. இங்குள்ள, 'மதில் சூழ்ந்த நகரம்' பகுதி, 2019ல் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, ஜெய்ப்பூர் உலக பாரம்பரிய தளமாகவும் அறிவிக்கப்பட்டது. கடந்த 2023 - 25ல், மதில் சூழ்ந்த நகரம் பகுதியின் பாதுகாப்பு தொடர்பாக, ஐ.நா.,வின் கல்வி, கலாசார அமைப்பான 'யுனெஸ்கோ' கவலை தெரிவித்தது.
இப்பகுதியில், வரலாற்றுச் சிறப்புமிக்க வீடுகள் இடிக்கப்படுவது, விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருப்பது உள்ளிட்ட பிரச்னைகளும் குறிப்பிடப்பட்டன. இந்நிலையில், மதில் சூழ்ந்த நகரம் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவின் விபரம்:
உலக புகழ்பெற்ற மதில் சூழ்ந்த நகரம் பகுதியில், சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரத்தில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் அவசர செயல் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 'யுனெஸ்கோ' வழங்கிய பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும்.
அந்த அங்கீகாரத்தை ஒரு முறை இழந்துவிட்டால், மீண்டும் கிடைக்காது. மதில் சூழ்ந்த நகரம் பகுதியில் மீளமுடியாத சேதத்தை தடுக்க, கடுமையான உத்தரவுகள் அவசியம் பிறப்பிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதை செயல்படுத்தவும் வேண்டும்.
இப்பகுதியில் உள்ள அனுமதியற்ற கட்டடங்கள் மற்றும் கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, இரு வாரங்களுக்குள் ஜெய்ப்பூர் வளர்ச்சி ஆணையம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பாரம்பரிய கட்டடப் பாதுகாப்பு விதிகள், கட்டட உயரக் கட்டுப்பாடுகள், மண்டல விதிமுறைகள், பாதுகாப்பு எல்லை பகுதிகள் மற்றும் கட்டுமான அனுமதிக்கு முன் பாரம்பரிய மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதா போன்ற விபரங்களை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
