ஜி 7 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு; கனடா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்
ஜி 7 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு; கனடா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்
ADDED : நவ 11, 2025 09:45 PM

புதுடில்லி: ஜி 7 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கனடா செல்கிறார்.
கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தின் அழைப்பை ஏற்று அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஒண்டாரியா நகருக்கு பயணமாகிறார். நவ.12ம் தேதி வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது, சர்வதேச நாடுகள் மத்தியில் தெற்கின் குரலை வலுப்படுத்துவது, சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து கனடா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் அனைவரையும் வரவேற்பார். இந்த சந்திப்பில் ஜி 7 உறுப்பு நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

