'நாடுகளுக்கு ஏற்றபடி கொள்கையை மாற்றுகிறது': அமெரிக்காவை மறைமுகமாக சாடிய ஜெய்சங்கர்
'நாடுகளுக்கு ஏற்றபடி கொள்கையை மாற்றுகிறது': அமெரிக்காவை மறைமுகமாக சாடிய ஜெய்சங்கர்
ADDED : டிச 01, 2025 04:32 AM

கொல்கட்டா: “அமெரிக்கா தற்போது ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு தனித்தனி வர்த்தக விதிமுறைகளை கையாள்கிறது,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்து உள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் உள்ள ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :
வர்த்தக ரீதியிலான முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நாடாக நீண்ட காலமாக தொடர்ந்து வந்த அமெரிக்கா, தற்போது ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றுவாறு தனித்தனி வர்த்தக விதிமுறைகளை வகுத்து இருக்கிறது.
அழுத்தம் அதற்கேற்றபடி அந்நாடுகளை கையாள்கிறது. தற்போதைய சூழலில் பொருளாதாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட, அரசியலுக்கு அளிக்கும் முக்கியத்துவமே மேலோங்கி இருக்கிறது.
சீனாவும் நீண்டகாலமாக தனக்கென தனி விதிகளை வகுத்து வர்த்தகம் செய்து வருகிறது. தற்போதும் அதே பாணியை தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறது.
உலகமயமாக்கல், வினியோக தொடரில் ஏற்பட்ட பாதுகாப்பின்மை போன்ற அழுத்தங்களை உலகில் உள்ள பல்வேறு நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.
இந்த இக்கட்டான சூழலை புரிந்து கொண்டு, புதிய வர்த்தக ஏற்பாடுகள் மற்றும் வாய்ப்புகளுக்கு நம் அரசு ஊக்கம் அளித்து வருகிறது. மக்கள் நலனை மையமாக கொண்ட பொருளாதார முடிவுகளை எடுத்து வருகிறது.
நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான போக்குவரத்து, துறைமுகம், எரிசக்தி மற்றும் மின் துறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளில் ஆசிய பொருளாதாரத்திற்கு நிகராக நாமும் வளர்ந்து வருகிறோம். குறிப்பாக, நம் 'மேக் இன் இந்தியா' திட்டம் புதிய உயரங்களை எட்டி வருகிறது.
முன்னேற்றம் நம் நாடு மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் இன்றைய போட்டி மிகுந்த உலகில், நாம் பின்தங்காமல் முன்னேற முடியும்.
செமிகண்டக்டர்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரிகள், ட்ரோன்கள் மற்றும் உயிரி அறிவியலுக்கான உலகம் இது. எனவே, அந்த துறையில் கொட்டி கிடக்கும் வாய்ப்புகளை நாம் முழுதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

