தூதர்கள் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு; கனடாவுக்கு ஜெய்சங்கர் குட்டு
தூதர்கள் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு; கனடாவுக்கு ஜெய்சங்கர் குட்டு
UPDATED : அக் 22, 2024 08:08 AM
ADDED : அக் 22, 2024 07:32 AM

புதுடில்லி: தூதர்கள் தொடர்பான விவகாரத்தில், கனடா இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் நேரடியாக குற்றம் சாட்டியதால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சீர்கெட்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதர் உட்பட 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. இந்தியாவும் கனடா தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலுக்கு, ஜெய்சங்கர் அளித்த பேட்டி: இந்திய தூதர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் கனடாவில் இருக்கிறார்கள் என அவர்களிடம் கூறினோம். இதற்கு அவர்கள் பேச்சு சுதந்திரம் என பதில் அளித்தனர். இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். மேற்கத்திய நாடுகள் தங்கள் நாடு தூதர்களுக்கு எடுத்துக்கொள்ளும் உரிமையும், மற்ற நாட்டு தூதரர்களை நடத்தும் விதமும் முற்றிலும் வேறுபட்டது.
தூதர்களை கையாள்வதில் கனடா பாசாங்குதனம் காட்டுகிறது. கனடாவில் என்ன நடக்கிறது என்பது குறித்தும், அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை மட்டுமே இந்திய தூதர்கள் கவனிக்கின்றனர். இது கூட அவர்களுக்கு (கனடா) பிரச்னை இருப்பது போல் தெரிகிறது. ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். கனடா தூதர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.