நங்கூரம் போட்ட ஜெய்ஸ்வால் ; முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம்
நங்கூரம் போட்ட ஜெய்ஸ்வால் ; முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம்
UPDATED : அக் 10, 2025 05:09 PM
ADDED : அக் 10, 2025 03:27 PM

புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டில்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 38 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.
அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 7வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் சாய் சுதர்சனும் அரைசதம் விளாசினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 87 ரன்களில் அவுட்டானார். இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 193 ரன்களை குவித்தனர்.
அதன்பிறகு, ஜெய்ஸ்வால், கேப்டன் கில் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களை சேர்த்துள்ளது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கில் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.