ADDED : ஜூலை 12, 2025 01:56 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஹிந்துக்களை மத மாற்றம் செய்வதற்காக, நேபாளம் வழியாக முஸ்லிம் நாடுகளிடம் இருந்து மத போதகர் ஜலாலுதீன் என்ற சங்கூர் பாபா, 300 கோடி ரூபாய் பெற்றது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, பல்ராம்புர் மாவட்டத்தின் மத்புர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மத போதகர் ஜலாலுதீன், அவரது உதவியாளர் நஸ்ரீன் ஆகியோர், 40க்கும் மேற்பட்டோரை கட்டாய மத மாற்றம் செய்ததாக, சமீபத்தில் லக்னோவில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஹவாலா பணம்
இதையடுத்து, மத்புர் கிராமத்தில் ஜலாலுதீன் சட்ட விரோதமாக கட்டிய 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
கட்டாய மத மாற்றம் தொடர்பாக, உ.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணை குறித்து, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளிடம் இருந்து ஜலாலுதீன் 500 கோடி ரூபாய் பெற்றுள்ளார். இதில், 200 கோடி ரூபாய் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 300 கோடி ரூபாய், 'ஹவாலா' வாயிலாக நம் அண்டை நாடான நேபாளம் வழியாக வந்துள்ளது.
நம் நாட்டில் கட்டாய மத மாற்றம் செய்வதற்கே இந்த பணம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, நேபாளத்தின் எல்லை மாவட்டங்களான காத்மாண்டு, நவல்பராசி, ரூபந்தேஹி, பாங்கேவில், 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கப்பட்டன.
ஏஜெண்டுகள்
முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து, இந்த வங்கி கணக்குகளுக்கு அவ்வப்போது பணம் வந்துள்ளது. நேபாளத்தில் உள்ள ஏஜன்டுகள், 4 - 5 சதவீத கமிஷனை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள பணத்தை ஜலாலுதீனுக்கு அனுப்பி வந்துள்ளனர்.
நேபாள கரன்சியாக கொண்டு வரப்பட்ட பணம், உ.பி.,யின் பால்ராம்புர், ஷ்ரவஸ்தி, பஹ்ரைச், லக்கிம்பூர் போன்ற மாவட்டங்களில் இந்திய கரன்சியாக மாற்றப்பட்டது. நேபாளத்தில் இருந்து பணத்தை உ.பி.,க்கு கடத்த, பீஹாரைச் சேர்ந்த ஏஜன்டுகளும் உதவி செய்துள்ளனர்.
இப்படி ஹவாலா வாயிலாக பணத்தை பெற்ற மத போதகர் ஜலாலுதீன், ஹிந்துக்களை குறிப்பாக பெண்களை கட்டாயமாக மத மாற்றம் செய்துள்ளார். அவர் மற்றும் அவரது கூட்டாளிகளின் வங்கி கணக்குகளை ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.