ADDED : மார் 21, 2025 10:07 PM
பாலக்காடு; 'பிரண்ட்ஸ் ஆப் பாரதப்புழா' என்ற அமைப்பின் தலைமையில், தண்ணீர் தினமான இன்று முதல் 'ஜலமிஷன் பாலக்காடு 2030' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மக்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், ஐந்து ஆண்டுகளுக்குள் மாவட்டத்தில் நீர் இருப்பை அதிகரிக்க, 'ஜலமிஷன் பாலக்காடு 2030' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பாரம்பரிய நீராதாரங்களுக்கு புத்துயிர் அளித்தல், நீர் மாசுபாட்டைத் தடுத்தல், நீர் விநியோக முறைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், நிலையான நீர் மேலாண்மை அமைப்புகளை செயல்படுத்துதல் மற்றும் நீர் பாதுகாப்பிற்காக உள்ளூர் மட்டத்தில் தன்னார்வ அமைப்புகளை உருவாக்குதல் ஆகிய செயல்பாடுகள் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
பாலக்காடு நூறணி சாரதா சங்கர மண்டபத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், கலெக்டர் பிரியங்கா திட்டத்தை துவக்கி வைக்கிறார். அமைப்பின் தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகிக்கிறார். விழா ஏற்பாடுகளை, அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.