ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: மோடி தலைமையில் பா.ஜ., நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: மோடி தலைமையில் பா.ஜ., நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு
ADDED : ஆக 26, 2024 06:37 PM

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.,சார்பில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி தலைமையில் 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
90 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு வரும் செப். 18, செப்.25, அக்.01 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் தேதியை கடந்த 16-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஓட்டு எண்ணிக்கை அக்.04ம் தேதி நடக்கிறது.
இதையாட்டி தேர்தல் பிரசார திட்டத்தை பா.ஜ., தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள், மூன்று மாநில முதல்வர்கள் உள்ளிட்ட 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, நிதின் கட்கரி, மனோகர்லால் கட்டார், சிவராஜ்சிங் சவுகான், ஸ்மிருதி இரானி, அனுராக்சிங் தாக்குர், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால், ஹிமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 40 பேர் பிரசார களத்தில் இடம் பெற்றுள்ளனர்.மோடி பங்கேற்கும் பிரசார தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.