அரசு துறைகளில் பென் டிரைவ், வாட்ஸ் ஆப் பயன்பாடு: தடை விதித்தது ஜம்மு-காஷ்மீர் அரசு
அரசு துறைகளில் பென் டிரைவ், வாட்ஸ் ஆப் பயன்பாடு: தடை விதித்தது ஜம்மு-காஷ்மீர் அரசு
ADDED : ஆக 25, 2025 09:50 PM

ஸ்ரீநகர்: அனைத்து அரசு துறை அலுவலகங்களில் பென் டிரைவ் மற்றும் வாட்ஸ் ஆப் பயன்பாட்டிற்கு ஜம்மு-காஷ்மீர் அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில், கடந்த மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, மின் துறை உட்பட பெரும்பாலான அதிகாரப்பூர்வ தளங்கள் குறிவைக்கப்பட்டன, மேலும் சிலவற்றை மீட்டெடுக்க இன்னும் போராட்டம் நடைபெறுகிறது.
சைபர் தாக்குதல்கள் பொது சேவைகள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளை பாதித்தன.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியாவில் மின் துறையில் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்கள் நடந்ததாகவும் இந்த தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன என்று மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில்,ஜம்மு-காஷ்மீர் அரசுத் துறைகளில் பென் டிரைவ்களைப் பயன்படுத்துதல், வாட்ஸ்ஆப் தடைசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கான உத்தரவை பொது நிர்வாகத் துறை ஆணையர் செயலாளர் எம். ராஜு இன்று பிறப்பித்தார்.
பொது நிர்வாகத் துறை ஆணையர் செயலாளர் எம். ராஜு வெளியிட்டுள்ள உத்தரவு:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சைபர் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துதல், முக்கியமான அரசாங்கத் தகவல்களைப் பாதுகாத்தல் மற்றும் தரவு மீறல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகல் ஆகியவற்றின் அபாயங்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள அனைத்து நிர்வாக அரசுத் துறைகளிலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை ஆணையர் அலுவலகங்களிலும் அதிகாரப்பூர்வ சாதனங்களில் பென் டிரைவ்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளுக்கும் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக சேவை தளங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
தரவு இறையாண்மையை நிலைநிறுத்தவும், பாதுகாப்பு மீறல்களைத் தடுக்கவும், வாட்ஸ்ஆப் போன்ற பொது செய்தி தளங்கள் பாதுகாப்பற்ற ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.