சிறப்பு அந்தஸ்து ரத்தால் ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சி பெருமிதம்! திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு
சிறப்பு அந்தஸ்து ரத்தால் ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சி பெருமிதம்! திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு
ADDED : பிப் 21, 2024 03:05 AM

ஜம்மு: ''ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின், யூனியன் பிரதேசம் வளர்ச்சியை நோக்கி வேகமாக நடைபோடுகிறது,'' என, 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
ஜம்மு - காஷ்மீரில், கல்வி, ரயில், விமானம் மற்றும் சாலை போக்குவரத்து துறைகளில், 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு, 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி ஜம்முவில் இருந்து நேற்று துவக்கி வைத்தார்.
மகிழ்ச்சி
அப்போது நடந்த கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:
ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 மிகப் பெரிய தடையாக இருந்தது. பா.ஜ., அரசு, 2019ல் அதை ரத்து செய்த பின், ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிப் பாதையை நோக்கி நடைபோடுகிறது.
வரலாற்றில் முதன்முறையாக, அரசின் வளர்ச்சி திட்டங்கள், ஜம்மு - காஷ்மீர் மக்களின் வீடு நோக்கி வர துவங்கியுள்ளன. ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே முதன்மைப்படுத்தும் அரசால் சாமானியர்களின் நலனைப் பற்றி சிந்திக்க முடியாது. குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து ஜம்மு - காஷ்மீர் விடுபட்டுள்ளதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு முதன்முறையாக அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நீதிக்கான உத்தரவாதம் கிடைத்தது.
வளர்ந்து வரும் ஜம்மு - காஷ்மீர் குறித்து உலகம் முழுதும் மிகுந்த உற்சாகம் நிலவுகிறது. ஜம்மு - காஷ்மீருக்கான திட்டங்கள், அப்பகுதியின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரில் மட்டும் 50 கல்லுாரிகள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டின் முன்னேற்றத்தில் பெண்கள் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், வங்கிகளில் கடன் வாங்கி, அவற்றை முறையாக திருப்பிச் செலுத்துகின்றனர்.
ஜம்மு - காஷ்மீரில் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த கீர்த்தி சர்மா என்ற பெண், இதில் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டுள்ளார்.
லட்சாதிபதி
நாடு முழுதும் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கு பெண்கள் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், 1,500 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை பிரதமர் நேற்று வழங்கினார். 'வளர்ந்த பாரதம்; வளர்ந்த ஜம்மு' திட்ட பயனாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

