அப்பாடா... பிரசாரம் ஓவர்! ஓட்டுப்பதிவுக்கு ரெடியாகும் ஜம்மு காஷ்மீர்
அப்பாடா... பிரசாரம் ஓவர்! ஓட்டுப்பதிவுக்கு ரெடியாகும் ஜம்மு காஷ்மீர்
ADDED : செப் 16, 2024 07:43 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிந்துள்ள நிலையில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்திய அரசியல் களத்தில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
முதல்கட்ட ஓட்டுப்பதிவு வரும் 18ம் தேதியும், 2ம் கட்ட ஓட்டுப்பதிவு செப்டம்பர் 25ம் தேதி நடக்கிறது. அக்டோபர் 1ம் தேதி 3ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. 3 கட்ட ஓட்டுப்பதிவுக்கு பின்னர் அக்டோபர் 8ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந் நிலையில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ள 24 தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவடைந்துள்ளது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் 24 தொகுதிகளில் 3 பெண்கள் உள்பட 219 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
பிரசாரம் நிறைவு பெற்றுள்ளதால் ஓட்டுப்பதிவு மற்றும் பாதுகாப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து போலீஸ் ஐ.ஜி., பிர்டி கூறி உள்ளதாவது; முதல் கட்ட ஓட்டுப்பதிவு செப்டம்பர் 18ம் தேதி நடக்கிறது. அதற்கான அனைத்து விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
நேர்மையாக, அச்சமின்றி பாதுகாப்பான முறையில் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.