ஜம்மு காஷ்மீர் தேர்தல்களம் விறுவிறு! பல முனைப்போட்டியில் வெல்லப்போவது யார்?
ஜம்மு காஷ்மீர் தேர்தல்களம் விறுவிறு! பல முனைப்போட்டியில் வெல்லப்போவது யார்?
UPDATED : செப் 01, 2024 07:24 AM
ADDED : செப் 01, 2024 07:06 AM

புதுடில்லி: பல முனைப்போட்டி நிலவும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் 4ம் தேதி பேரணிகளில் ராகுல் கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முதல்முறை
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக வரும் 18ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதற்கான வேட்பு மனு வாபஸ் பெறும் காலக்கெடு முன்னரே முடிந்துவிட்டது.
தீவிரம்
ஓட்டுப்பதிவுக்கு இன்னமும் குறைவான நாட்களே உள்ள நிலையில் பா.ஜ., காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. ஜம்மு பகுதியில் செல்வாக்கு அதிகமுள்ள பா.ஜ., மற்ற பகுதிகளில் சிறு கட்சிகளையும், செல்வாக்குள்ள தனி நபர்களையும் கைகோர்த்து களம் இறங்கியுள்ளது.
காங்கிரஸ், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக்கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. ஆனாலும், 5 தொகுதிகளில், இரு கட்சிகளின் வேட்பாளர்கள், ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சர்ச்சைக்குரிய மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, தனித்துப் போட்டியிடுகிறது. இது மட்டுமின்றி, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தின் கட்சியும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.இவர்கள் மட்டுமின்றி, செல்வாக்குள்ள தனி நபர்கள், அரசு எதிர்க்கும் அமைப்புகளும் வேட்பாளர்களை களமிறங்கி உள்ளனர். இப்படி பல முனை போட்டி நிலவுவதால் ஓட்டுகள் சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் ராகுல் பிரசாரம் குறித்து காங்கிரஸ் தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அங்கு வரும் 4ம் தேதி பேரணிகளில் ராகுல் கலந்து கொள்ள இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 4
அக்கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவர் தாரிக் அகமது கர்ரா கூறி உள்ளதாவது; ஜம்முவில் உள்ள பனிஹல், காஷ்மீரில் உள்ள தூரு பகுதிகளில் வரும் 4ம் தேதி தேர்தல் பிரசார பேரணிகள் நடத்த உள்ளோம். அந்த பேரணிகளில் ராகுல் கலந்து கொள்கிறார்.
மாற்றம்
பாரத் ஜோடோ யாத்திரைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த யாத்திரையின் பயனாக, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஓட்டுக்கள் கிடைக்கும். நிச்சயம் இம்முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என்று கூறி உள்ளார்.