ஜன. 1ம் தேதி வரை பட்டாசு விற்க தடை: டில்லி கோர்ட் உத்தரவு
ஜன. 1ம் தேதி வரை பட்டாசு விற்க தடை: டில்லி கோர்ட் உத்தரவு
ADDED : அக் 24, 2024 06:46 PM

புதுடில்லி: டில்லியில், 2025 ஜன. 1ம் தேதி வரை பட்டாசு விற்க தடை விதிக்கவும், பட்டாசு கிடங்குகளுக்கு சீல் வைக்கவும், டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசு காரணமாக, பட்டாசு விற்க டில்லி அரசு விதித்து இருந்த தடைக்கு எதிராக, பட்டாசு உரிமம் வைத்துள்ளவர்கள், டில்லி கோர்ட்டில் வழக்கு போட்டனர்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த டில்லி கோர்ட், மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து ஆணை பிறப்பித்தது. மேலும், ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு வைத்துள்ள அனைத்து கிடங்குகளையும் சீல் வைக்க வேண்டும் என்றும் டில்லி அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பயிர் கழிவு எரிப்பதே இதற்கு முக்கிய காரணம்.
மோசமான காற்றின் தரம் காரணமாக, டில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, அனைத்து வகையான பட்டாசுகள் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை முழுமையான தடையை ஏற்கனவே விதித்துள்ளது.
ஆனால் பல்வேறு பண்டிகைகள் காரணமாக தடையை மீறி மக்கள் பட்டாசு வெடிப்பது வாடிக்கையாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மாநில அரசுக்கு, டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

