ADDED : ஜன 20, 2024 06:06 AM

பெங்களூரு: ''அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று மாநில அரசு, விடுமுறை அறிவிக்க வேண்டும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தினார்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று பா.ஜ., - எஸ்.டி., பிரிவு மாநில அளவிலான மாநாட்டை, அக்கட்சி தலைவர்கள் விஜயேந்திரா, எடியூரப்பா, பிரஹலாத் ஜோஷி உட்பட பலர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர். இதில் மாநில தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:
பல மாநிலங்களில் வரும் 22ம் தேதி அந்தந்த மாநில அரசுகள் விடுமுறை அறிவித்து உள்ளன. மத்திய அரசும், அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது. அதுபோன்று கர்நாடக அரசும், விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்விழாவை, ஹிந்துக்கள் பார்க்க வேண்டும்.
வால்மீகி சமூகத்துக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே பிரிக்க முடியாத உறவு உள்ளது. பழங்காலத்தில் இருந்தே பா.ஜ., மற்றும் எஸ்.டி., சமூகத்தினர் இடையே பிரிக்க முடியாத உறவு உள்ளது.
பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு, எஸ்.டி., சமூகத்தினரின் பங்கு அதிகம். எடியூரப்பா செய்த வளர்ச்சிப் பணிகளுக்கு பின்னால், வால்மீகி சமுதாய எம்.எல்.ஏ.,க்களின் பங்களிப்பும் சாத்தியமில்லை.
இச்சமுதாயத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை தேசத்தின் உயரிய பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்துள்ளார். இவர்கள் மீது பிரதமருக்கு இருக்கும் அக்கறையை இது காட்டுகிறது.
மாநிலத்தில் இச்சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்திய பெருமை பா.ஜ.,வுக்கு உள்ளது. தேர்தல் நேரங்களில் மட்டுமே காங்கிரஸ் பேசுகிறது. ஆனால் பா.ஜ., அப்படி அல்ல. எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, வால்மீகி ஜெயந்திக்கு விடுமுறை அறிவித்தார்.
மோடி தலைமையிலான மத்திய அரசு, பகவான் பிர்சா முண்டா பிறந்த நாளை கொண்டாட சொன்னது. லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். தேர்தல் வித்தை நடத்தும் காங்கிரஸ், வாக்குறுதிகளை அறிவிக்கிறது.
ஆனால், அத்திட்ட பயன், பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை. நீதி கிடைக்க நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கிறது.எடியூரப்பா, பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசுகளின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளர்களின் வெற்றிக்கு, நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.