ADDED : அக் 18, 2024 10:59 PM

வயிற்றுப் புண்களை ஆற்றவும், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றை சரி செய்யவும், உடலை குளுமையாக வைத்திருக்கவும் ஜவ்வரிசிக்கு முக்கிய பங்கு உண்டு. ஜவ்வரிசி கஞ்சி, பாயசத்தை மக்கள் அதிகம் விரும்பி பருகுவர்.
ஜவ்வரிசியை பயன்படுத்தி பல டிஷ்கள் செய்யலாம். அதில் ஒன்று, ஜவ்வரிசி வடை. உளுந்து வடை, பருப்பு வடை, வெங்காய வடை, கீரை வடை கேள்விப்பட்டிருப்போம். அது என்ன ஜவ்வரிசி வடை? புதிதாக இருக்கிறதே என்று மனதில் தோன்றும்.
வட மாநிலங்களில் ஜவ்வரிசி வடையை, 'சாபுதானா வடை' என்று அழைக்கின்றனர். இந்த வடைக்கு தனி மவுசு உண்டு. வீட்டில் ஜவ்வரிசி வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவைப்படும் அளவு ஜவ்வரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேவையான அளவு பொரிகடலை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்து பொடியாக்க வேண்டும்.
பெரிய வெங்காயம் ஒன்றை நறுக்க வேண்டும். இரண்டு மிளகாயை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
உருளைக் கிழங்கை நன்கு வேகவைத்து தோல் நீக்க வேண்டும். பின் நன்றாக பிசைய வேண்டும். இதனுடன் பொரி கடலை பவுடர், நறுக்கி வைத்திருந்த வெங்காயம், மிளகாய், தேவைப்படும் அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
வெந்நீரில் ஜவ்வரிசி நன்கு ஊறிய பின், உருளைக் கிழங்கு கலவையை ஜவ்வரிசியுடன் சேர்க்க வேண்டும். பின், கடாயில் எண்ணெய் ஊற்றி வடை தட்டி போட்டு எடுக்கலாம். ஜவ்வரிசி வடை ரெடி.
எண்ணெயில் வேகும்போது மாவு தனியாக பிரிந்து வருவது போல் தோன்றினால், கூடுதலாக உருளைக் கிழங்கு சேர்த்துக் கொள்ளலாம். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக, ஜவ்வரிசி வடையை கொடுத்துப் பாருங்கள்.
குழந்தைகள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும். 'அம்மா சூப்பர்' என்று குழந்தைகளிடம் இருந்து உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
-- நமது நிருபர் -

