ஊழலை ஒழிக்க தன்னாட்சி அமைப்பை உருவாக்க விரும்பிய ஜவகர்லால் நேரு
ஊழலை ஒழிக்க தன்னாட்சி அமைப்பை உருவாக்க விரும்பிய ஜவகர்லால் நேரு
ADDED : ஆக 22, 2011 12:24 AM
புதுடில்லி : ''ஊழலைத் தடுக்க, தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு ஒன்றை உருவாக்க, நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு விரும்பினார்,'' என, முன்னாள் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
கடந்த 1993 முதல் 1999 வரை, தேர்தல் கமிஷனராகப் பணியாற்றியவர் ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, பேட்டி அளித்த இவர் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து, நேரு தலைமையில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின், 1948 முதல் 1964 வரை, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து, 1962ம் ஆண்டில் நடந்த, மூன்றாவது அகில இந்திய சட்ட மாநாட்டில் பேசிய பிரதமர் நேரு, ' ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களைக் கண்காணிக்கவும், விசாரிக்கவும் ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு தேவை' என, குறிப்பிட்டார். அவரது ஆலோசனையின்படி, அது போன்ற ஒரு அமைப்பை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டமாக, அப்போதைய அட்டர்னி ஜெனரல் சீதல்வத் என்பவரை, விசாரணைக் குழுவின் தலைவராகக் கொண்டு, அந்த அமைப்பு செயல்படவும், இது தொடர்பாக, சட்ட மசோதா ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, பொது மக்களிடையே பல்வேறு விவாதங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, அதன் பின், பார்லிமென்டில் மசோதாவை அறிமுகப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இந்திய- சீனப் போர் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் ஒட்டு மொத்த கவனமும் திசை மாறியது. புதிய சட்டத்தை உருவாக்கும் முயற்சி, கிடப்பில் போடப்பட்டது. அதன் பின், நேருவின் மரணத்தைத் தொடர்ந்து, இவ்விவகாரம் முற்றிலும் மறக்கப்பட்டது. இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.