5வது முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாகும் ஜெயாபச்சனுக்கு ரூ.1,578 கோடி சொத்து
5வது முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாகும் ஜெயாபச்சனுக்கு ரூ.1,578 கோடி சொத்து
ADDED : பிப் 14, 2024 01:22 PM

லக்னோ: ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு உ.பி.,யில் இருந்து சமாஜ்வாதி சார்பில் போட்டியிடும் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயாபச்சன் தம்பதிக்கு ரூ.1,578 கோடி சொத்து உள்ளது தெரியவந்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 56 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் 27 ல் நடைபெற உள்ளது. உ.பி.,யில் ஒரு ராஜ்யசபா எம்.பி., வெற்றி பெற 37 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. அங்கு சமாஜ்வாதி கட்சிக்கு 108 எம்.எல்.ஏ.,க்களும் காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். இதனால், மூன்று பேரை அவர்களால் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்ய முடியும்.
இந்நிலையில், சமாஜ்வாதி எம்.பி., ஆக இருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜெயாப்பச்சன் (75), சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம்ஜி லால் சுமன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலோக் ரஞ்சன் ஆகியோரை வேட்பாளர்களாக அக்கட்சி அறிவித்துள்ளது. ஜெயாபச்சன், 2004 முதல் ராஜ்யசபா எம்.பி., ஆக உள்ளார். ஏற்கனவே 4 முறை எம்.பி.,யாக உள்ள அவர், 5வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜெயாபச்சன் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, அமிதாப்பச்சன்- ஜெயாபச்சன் தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,578 கோடி ஆக உள்ளது. 2022 - 23ம் நிதியாண்டில், ஜெயாபச்சனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 1,63, 56,190. அமிதாப்பச்சனின் சொத்து மதிப்பு ரூ. 273, 74,96, 590.
இருவருக்கும் இணைந்து ரூ. 849.11 கோடி மதிப்பு அசையும் சொத்தும், ரூ.729.77 கோடி மதிப்பு அசையா சொத்தும் உள்ளது. வங்கிக்கணக்கில் ஜெயாபச்சன் பெயரில் ரூ.10,11, 33,172 ம், அமிதாப்பச்சன் பெயரில் ரூ. 120,45,62,083ம் உள்ளது. இவரிடம் ரூ.54.77 கோடி மதிப்பு நகைகளும், ரூ.17.66 கோடி மதிப்பில் 3 சொகுசு கார்கள் உட்பட 16 வாகனங்கள் உள்ளன. அதேபோல், ஜெயாபச்சனிடம் ரூ.40.97 கோடி மதிப்பு நகைகளும், ரூ.9.82 லட்சம் மதிப்பில் காரும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

