ADDED : ஜன 10, 2025 07:12 AM

பெங்களூரு: ''பல்லாரியில் ஜீன்ஸ் தொழிற்சாலை அமைப்பதற்காக, 154 ஏக்கர் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இங்கு சர்வதேச ஜீன்ஸ் நிறுவன மையமும் அமைக்க அனுமதி அளிக்கப்படும்,'' என கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அரசியல் குழப்பம் காரணமாக, வங்கதேசத்தில் ஜீன்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்களின் பார்வை, பல்லாரி ஜீன்ஸ் தொழிற்சாலைகள் மீது விழுந்துள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தயாராக உள்ளோம்.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே 500 ஜீன்ஸ் தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் 10,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஜவுளி துறையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, ஜீன்ஸ் தொழிற்சாலை துவங்கும் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜவுளி துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பாரத் ஜோடோ யாத்திரை நடத்திய போது, பல்லாரியில் ஜீன்ஸ் பூங்கா அமைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இது தொடர்பாக, 2023ல் எங்கள் துறைக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.
கடந்தாண்டு பிப்ரவரியில் முதல்வர் தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், ஜீன்ஸ் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இப்பூங்காவால், இப்பகுதி பொருளாதார ரீதியாக முன்னேறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

