இனி மாத தவணையில் நகை கடனை செலுத்தலாம்: சுலபமாக நகையை மீட்க வசதி
இனி மாத தவணையில் நகை கடனை செலுத்தலாம்: சுலபமாக நகையை மீட்க வசதி
ADDED : நவ 20, 2024 04:58 AM

புதுடில்லி: நகைக் கடன் பெற்று விட்டு, வட்டியை மட்டும் செலுத்தி வந்து, அசலை கட்டி நகையை மீட்க முடியாத நிலை, இனி இருக்காது. வீடு, வாகனக் கடன் போலவே, இ.எம்.ஐ., எனப்படும் மாதத் தவணை முறை, விரைவில் நகைக் கடனுக்கும் வரப்போவதே காரணம்.
நகைக் கடனில், வட்டி மற்றும் அசலை கணக்கிட்டு, இ.எம்.ஐ.,யில் அதாவது, மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வங்கிகள், தங்க நகைக் கடன் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
தங்க நகைகள் மீதான கடன் வணிகத்தில் உள்ள குறைபாடுகள், நடைபெறும் மோசடிகள் குறித்து, ரிசர்வ் வங்கி அண்மையில் கவலை தெரிவித்தது. செப்டம்பர் 30ம் தேதி ஆர்.பி.ஐ., வெளியிட்ட சுற்றறிக்கையில், தங்க நகைக் கடன் தொகை, நகை மதிப்பீடு, நகை ஏலத்தில் வெளிப்படைத்தன்மை, நகைக்கு இணையான கடன்தொகை விகிதம், ஒரே அடமானக் கடன் மீது கூடுதல் கடன் ஆகியவற்றில், பல குறைபாடுகள் தெரிய வந்திருப்பதாக அதில் கூறப்பட்டது.
இந்நிலையில், நகைக் கடன் வணிகத்தில் புதிய வசதியாக, இ.எம்.ஐ., திட்டத்தை அறிமுகம் செய்ய வங்கிகள், நகைக் கடன் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி, பெறப்படும் நகைக் கடனுக்கு வட்டியை மட்டும் கட்டாமல், குறிப்பிட்ட காலத்தை தேர்வு செய்து, வீடு, வாகனக் கடன் போல, அசலில், குறிப்பிட்ட தொகையையும் சேர்த்து, மாதத் தவணையில் கட்டலாம்.
இதனால், குறிப்பிட்ட ஆண்டுகளில், நகைக் கடன் அடைவதுடன், அசலைக் கட்ட முடியாமல், நகைகள் ஏலம் விடப்படுவது தவிர்க்கப்படும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கும் நன்மை ஏற்படும்.
* தனிநபர் கடன் 11.4% மட்டுமே வளர்ந்த நிலையில், தங்க நகைக் கடன் வணிகம் 51% வளர்ச்சி
* செப்டம்பர் நிலவரப்படி, மொத்த தங்க நகைக் கடன் வணிக மதிப்பு ரூ.1.47 லட்சம் கோடி