கர்நாடகாவில் 4 அதிகாரிகள் வீடுகளில் நகைகள், கட்டுக்கட்டாக பணம் சிக்கியது
கர்நாடகாவில் 4 அதிகாரிகள் வீடுகளில் நகைகள், கட்டுக்கட்டாக பணம் சிக்கியது
ADDED : நவ 22, 2024 02:41 AM

பெங்களூரு : கர்நாடகாவில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த நான்கு அரசு அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில் வராத நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்.,ஆட்சி நடக்கிறது.
இங்கு, மங்களூரு கனிமம் மற்றும் சுரங்க துறையில் மூத்த புவியியலாளராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணவேணி; மாண்டியாவில் காவிரி உபரிநீர் வெளியேற்றுவது குறித்து தகவல் சேமித்து வைக்கும் மைய நிர்வாக இயக்குனர் மகேஷ்;
பெங்களூரு நகர திட்டமிடல் துறை இயக்குனர் திப்பேசாமி, பெங்களூரு கலால் எஸ்.பி., மோகன் ஆகிய நான்கு பேரும், தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து இருப்பதாக, லோக் ஆயுக்தா போலீசாருக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, லோக் ஆயுக்தா போலீசார் பல குழுக்களாக பிரிந்து, மேற்கண்ட நான்கு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகளில் நேற்று அதிரடி சோதனையில் இறங்கினர்.
பெங்களூரு, மங்களூரு, மாண்டியா, சிக்கபல்லாப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில், 25 இடங்களில் சோதனை நடந்தது. இதில், கணக்கில் வராத நகைகள், பணம், வெள்ளி பொருட்கள், சொத்து ஆவணங்கள் சிக்கின.
குறிப்பாக, திப்பேசாமி வீட்டில் மட்டும், 28 தங்க மோதிரங்கள், 23 தங்கச் செயின்கள், 8 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின.
கிருஷ்ணவேணி, சிக்கபல்லாப்பூரில் முதலில் பணியாற்றினார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால், இரண்டு மாதங்களுக்கு முன், மங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார்.
நான்கு பேருக்கும் சொந்தமான இடங்களில், ஏராளமான சொத்து ஆவணங்களையும், லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
சில தினங்களுக்கு முன்தான், 10 அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கைப்பற்றினர்.