சுங்க வரி வசூலிக்கக்கூடாத நகைகள்: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சுங்க வரி வசூலிக்கக்கூடாத நகைகள்: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
ADDED : டிச 04, 2024 06:58 PM

புதுடில்லி: 'வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணி, தான் வைத்திருக்கும் பயன்படுத்திய நகைகளுக்கு சுங்கவரி செலுத்த தேவையில்லை' என, டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் துபாயிலிருந்து தாயகம் திரும்பிய பெண் பயணி, 200 கிராம் தங்க நகைகள் கொண்டுவந்துள்ளார். விமான நிலையத்தில் அந்த பெண்ணிடம் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது 200 கிராம் தங்க நகைகள் இருந்ததால், அதற்கு சுங்க வரி செலுத்த வேண்டும் என கூறினர்.
அந்த பெண், 'இந்த நகை அனைத்தும் புதிதாக வாங்கியவை கிடையாது. ஏற்கனவே என்னிடம் இருந்தவை. நான் பயன்படுத்தி வருபவை' என்று கூறினார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த சுங்கத்துறையினர், நகைகளை பறிமுதல் செய்தனர்.
சுங்கத்துறை முடிவில் அதிருப்தி அடைந்த அந்த பெண், டில்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா மற்றும் ரவீந்தர் துடேஜா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் வைத்திருக்கும் தனிப்பட்ட, பயன்படுத்திய நகைகள்; வெளிநாட்டுப் பயணத்தில் புதிதாக வாங்கப்படாத நகைகள், சுங்க வரிக்கு உட்பட்டவை அல்ல. அதற்கு சுங்கவரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட 200 கிராம் தங்க நகைகளை அந்த பெண்ணிடம் திரும்ப ஓப்படைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.