மங்களூரு வங்கியில் கொள்ளை போனது ரூ.14 கோடி மதிப்பு நகைகள் என 'திடுக்'
மங்களூரு வங்கியில் கொள்ளை போனது ரூ.14 கோடி மதிப்பு நகைகள் என 'திடுக்'
ADDED : ஜன 20, 2025 06:58 AM
மங்களூரு: மங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் இருந்து 14 கோடி ரூபாய் தங்கம், 11 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கபட்டதாக, வங்கியின் தலைவர் கிருஷ்ணா ஷெட்டி கூறியுள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு அருகே உல்லால் தாலுகா கோட்டேகாரு கிராமத்தில் கூட்டுறவு வங்கி உள்ளது.
இந்த வங்கியில் கடந்த 17ம் தேதி மதியம் 1:30 மணியளவில் புகுந்த நான்கு பேர் துப்பாக்கி, ஆயுதங்களை காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பினர்.
வங்கியில் 10 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
ஆனால் வங்கியின் தலைவர் கிருஷ்ணா ஷெட்டி 8 கோடி ரூபாய் நகைகள், 11 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
நகை, பணத்தை கொள்ளை அடித்தவர்கள் சம்பவ இடத்திலிருந்து காரில் கேரளா சென்றனர். அங்கிருந்து தமிழகத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வங்கியில் முழுமையாக சோதனை நடத்திய போது 14 கோடி ரூபாய் தங்க நகைகள், 11 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பதாக, வங்கி தலைவர் கிருஷ்ணா ஷெட்டி கூறி உள்ளார்.
இதற்கிடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் 2 கார்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதில் ஒரு கார் கேரளா நோக்கி சென்றதும், இன்னொரு கார் மங்களூரு சென்றதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் கொள்ளை கும்பலுக்கு உதவி செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் கூறுகையில், ''கொள்ளை நடந்த கூட்டுறவு வங்கியில் எச்சரிக்கை அலாரம் இல்லை. கண்காணிப்பு கேமராக்களும் வேலை செய்யவில்லை.
நான்கு பேர் உள்ளே புகுந்து கேட்டை பூட்டிய போது யாரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை.
''லாக்கர் இருக்கும் பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவும் வேலை செய்யவில்லை. பாதுகாப்பு குறைபாடு குறித்து கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் எழுத உள்ளோம்.
கொள்ளையர்கள் பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. கூடிய விரைவில் கைது செய்யப்படுவர். இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்துகிறோம்,'' என்றார்.