ஜார்க்கண்டில் நக்சல் ஒழிப்பில் பாதுகாப்புப் படையினர் தீவிரம்; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
ஜார்க்கண்டில் நக்சல் ஒழிப்பில் பாதுகாப்புப் படையினர் தீவிரம்; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
ADDED : ஜூலை 26, 2025 12:54 PM

ராஞ்சி: ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
இது பற்றிய விவரம் வருமாறு;
வட மாநிலங்களில் குறிப்பாக, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருந்தது. தினமும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை ஒடுக்கும் பணியை மத்திய அரசு முடுக்கி விட்டது. அதன் பயனாக, நக்சல்கள் செயல்பாடு குறைந்துள்ளது.
ஒரு சில அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே நக்சல்கள் பதுங்கி இருக்கின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் காங்கரா வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. உள்ளூர் போலீசாருடன், நக்சல் ஒழிப்பு கூட்டுப்படையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது, வனப்பகுதியில் மறைந்திருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
இருதரப்புக்கும் இடையே நிகழ்ந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏ.கே 47 எந்திர துப்பாக்கிகள், சிறு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
தொடர்ந்து அந்த பகுதியை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ள பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.