ஜார்க்கண்ட் தேர்தல் ஜரூர்! மனைவியுடன் வேட்பாளராக களம் இறங்கும் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் தேர்தல் ஜரூர்! மனைவியுடன் வேட்பாளராக களம் இறங்கும் ஹேமந்த் சோரன்
UPDATED : அக் 23, 2024 11:04 AM
ADDED : அக் 23, 2024 10:39 AM

ராஞ்சி; ஜார்க்கண்ட் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டு உள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன், பர்ஹைட் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு நவம்பர் 13ம் தேதியும், 2வது கட்டமாக நவம்பர் 20ம் தேதியும் நடக்கிறது. ஓட்டுகள் அனைத்தும் எண்ணப்பட்டு நவம்பர் 23ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் கொண்ட பெயர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெளியிட்டு உள்ளது. மொத்தம் 35 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கட்சித்தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரன், பர்ஹைட் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்குகிறார். இதே தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக தான் தற்போது அவர் உள்ளார். அவரின் மனைவி கல்பனா சோரன், காண்டே தொகுதியில் போட்டியிடுகிறார்.
பட்டியலில் ஹேமந்த் சோரன் சகோதரர் பசந்த் சோரன் வேட்பாளராக தும்கா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர்கள் தவிர, சபாநாயகர் ரவிந்திரநாத் மஹதோ நலா என்ற தொகுதியிலும், அமைச்சர் மிதிலேஷ் தாகூர் கர்வா தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.