ஜார்க்கண்ட் 'மாஜி' முதல்வர் சம்பாய் சோரன் பா.ஜ.,வில் ஐக்கியம்
ஜார்க்கண்ட் 'மாஜி' முதல்வர் சம்பாய் சோரன் பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : ஆக 30, 2024 04:52 PM

புதுடில்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரியில் அக்கட்சியின் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஜூனில் ஹேமந்த் சோரன் ஜாமினில் வெளியே வந்தவுடன், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சம்பாய் சோரன் பதவி விலகினார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிலருடன் டில்லி சென்றார் சம்பாய் சோரன், தொடர்ந்து பா.ஜ.,வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாயின. இது குறித்து பதிலளித்த சம்பாய் சோரன், 'அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என எண்ணினேன். ஆனால், அரசியலைவிட்டு விலக வேண்டாம் என்று மக்கள் அளித்த ஆதரவு காரணமாக பா.ஜ.,வில் இணைய முடிவு எடுத்துள்ளேன்' எனக் கூறியிருந்தார்.
அதன்படி, இன்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் முன்னிலையில் சம்பாய் சோரன் பா.ஜ.,வில் இணைந்தார்.
அம்மாநில சட்டசபைக்கு வரும் நவம்பர், டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் பா.ஜ.,வில் இணைந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.