ADDED : நவ 06, 2024 01:03 AM

புதுடில்லி, ஜார்க்கண்டில் சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பாக, 16 இடங்களில் சி.பி.ஐ., நேற்று அதிரடி சோதனை நடத்தியது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சஹிப்கஞ்ச் மாவட்டத்தில் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர்கள் பங்கஜ் மிஸ்ரா, பவித்ரா குமார் யாதவ், சஞ்சய் குமார் யாதவ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சுரங்க முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஜார்க்கண்டில் சஹிப்கஞ்ச் மாவட்டத்தில் 11 இடங்களிலும், ராஞ்சியில் மூன்று இடங்களிலும், பீஹார் தலைநகர் பாட்னா, மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டா ஆகியவற்றில் தலா ஒரு இடம் என, மொத்தம் 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில், 50 லட்சம் ரூபாய் ரொக்கம், தலா 1 கிலோ தங்கம், வெள்ளி மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

